நெல்லை : நெல்லை மாநகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கழிவு நீர் உந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல், கலெக்டர் அலுவலகம் முற்றுகை என போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகர பகுதிகளில் திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேறுவதைத் தடுக்க பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால் அப்பணியானது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே கழிவு நீர் உந்து நிலையம் அமைத்தால் துர்நாற்றம் வீசும், சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக்கூறி அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பாளை. விஎம் சத்திரம், சரண்யா நகர் மக்கள் அங்குள்ள பகுதியில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் பாளை. படப்பக்குறிச்சி மக்களும் இவ்வாறு கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமமுக சார்பில் நெல்லை மாவட்டச் செயலாளர் துரைப்பாண்டியன், மேற்கு மாவட்டச் செயலாளர் நாகராஜசோழன், நிர்வாகிகள் கிங் தேவேந்திரன், முத்துப்பாண்டி, அதிமுக சார்பில் வக்கீல் அன்பு அங்கப்பன், தாழை மீரான், கேபிள் சுப்பையா, சிவந்தி மகாராஜேந்திரன் மற்றும் படப்பக்குறிச்சி, திருவண்ணநாதபுரம் எம்ஜிஆர் காலனி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு நெல்லை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவுநீர் உந்து நிலையம் (பம்பிங் ஸ்டேசன்) அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த இடமானது எங்கள் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடும் இடமாக உள்ளது. மேலும் அந்த இடத்தில் ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது. மேலும் அந்த இடத்தை சுற்றியிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
படப்பக்குறிச்சி, திருவண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நடைபாதையாகவும் அதை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் அங்கு கழிவுநீர் உந்து நிலையம் அமைத்தால் நோய் பரவும். அத்துடன் பம்பிங் பிரச்னை ஏற்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நடைபாதை முடக்கப்படும். எனவே எங்கள் பகுதி மக்களை பாதிக்காத வகையில் கழிவுநீர் உந்து நிலையத்தை வேறோரு இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் நேற்று காலை மாநகராட்சி பணியாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தச்சநல்லூர் அருகே கீழக்கரை, அம்மன் கோயில் தெரு பகுதியில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். இதையறிந்த கீழக்கரை, பிரான்குளம் பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
பின்னர் 100க்கும் மேற்பட்ட அந்த பகுதி மக்கள் அம்மன் கோயில் தெருவில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி கமிஷனர் ஜான்சன், செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கீழக்கரையில் அமைய உள்ள கழிவுநீர் உந்து நிலையம் பிரான்குளம் பகுதியில் உள்ள குளக்கரையில் அமைப்பதாக தெரிவித்தனர். அந்த பகுதியில் குடியிருப்புகள் இல்லாததால் யாரும் எதிர்க்கவில்லை.
ஆனால் தற்போது கீழக்கரையிலேயே கழிவுநீர் உந்துநிலையம் அமைப்பதை எதிர்க்கிறோம். இந்த கழிவுநீர் உந்து நிலையம் அமைந்தால் கீழக்கரையில் உள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவர் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து மாநகராட்சி மேயர் முன்னிலையில் ஆலோசனை நடத்தி மறுபரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் பாளை. சாந்தி நகர் முதல் தெருவில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகே பொதுமக்கள் திரண்டனர். அப்போது பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர்.தொடர்ந்து அவர்கள் தெருவில் நின்று மாநகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். நெல்லை மாநகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
The post நெல்லை மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.