பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சியில் தொழில் உரிமம் பெறாத கடைகள், நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளில் மளிகை கடைகள், உணவகங்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள், இறைச்சி கடைகள், காய்கறி, பால், ஸ்வீட் கடைகள், பேக்கரிகள் உள்பட 2 ஆயிரம் கடைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடைகள், உணவு விடுதிகள் திருமண மண்டபங்கள் நடத்துபவர்கள் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் தொழில் உரிமம் பெறவில்லை.
இப்படி உரிமம் பெறாத கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அபராதம் விதித்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் அதிகாரிகள் அதிரடி காட்டி வரும் நிலையிலும் பல்வேறு தரப்பினர் இன்னும் தொழில் உரிமம் பெறாமல் உள்ளனர். இந்தநிலையில், வியாபாரிகள் தொழில் உரிமம் பெறுவதன் அவசியம் குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் ஆலோசனையின் பேரில், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி இதில் தலைம தாங்கினார். இந்த கூட்டத்தில் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது தொழில் உரிமம் பெறவில்லையெனில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், உரிமம் பெறாத பட்சத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் மூடி சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தொழில் உரிமம் பெறுவதன் அவசியம் குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஆணையர் விளக்கி கூறினார். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களும் தொழில் உரிமம் பெறுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
The post பூந்தமல்லி நகராட்சியில் தொழில் உரிமம் பெறாத கடைகள், நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்: ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.