உதய்பூர் அரண்மனைக்குள் செல்வது தொடர்பாக மோதல்: பாஜக எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் கல்வீச்சு தாக்குதல்

உதய்பூர்: உதய்பூர் அரண்மனைக்குள் செல்வது தொடர்பாக மன்னர் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகேந்திர சிங் மேவார் கடந்த 10 ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிறகு அரண்மனையில் முடிசூட்டுவது யார் என்பது தொடர்பாக மகேந்திர சிங் மேவாரின் சகோதரர் அரவிந்த் சிங்கிற்கும் அவரது மகனான பாஜக எம்.எல்.ஏ விஸ்வராத் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விஸ்வராத் சிங் குலதெய்வமான ஏக்லிங்நாத் கோவிலுக்கும், அரண்மனைக்கும் செல்ல திட்டமிட்டிருந்ததை அறிந்து அவருக்கு எதிராக அரவிந்த்சிங் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ விஸ்வராத் சிங் தனது ஆதரவாளர்களுடன் உதய்பூர் அரண்மனைக்கு செல்ல முற்பட்டார். ஆனால் அரண்மனைக்குள் நுழையவிடாமல் அரவிந்த் சிங் மேவார் தடுத்து நிறுத்தினார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் விஸ்வராத் சிங்கின் ஆதரவாளர்கள் அரண்மனையின் வாயில்களை முற்றுகையிட்டனர். பின்னர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். பாஜக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையால் மூவர் படுகாயமடைந்தனர். உதய்பூர் அரண்மனை விவகாரம் தொடர்பாக பேசிய விஸ்வராத் சிங் இந்த சம்பவம் துருதிஷ்ட வசமானது என்றும் நீதிமன்றத்தை அணுகி தீர்வுகாண இருப்பதாகவும் தெரிவித்தார்.

The post உதய்பூர் அரண்மனைக்குள் செல்வது தொடர்பாக மோதல்: பாஜக எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் கல்வீச்சு தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: