*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே ஜேசிபி இயந்திரத்தை வைத்து டிப்பர் லாரிகள் மூலம் அளவுக்கு அதிகமான மண் கொள்ளை நடப்பது, தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பசுமத்தூர் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியானது நெட்டேரி, பசுமாத்தூர், ஹதர்புரம், கொசவன்புதூர், அர்ஜினாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களின் விவசாயிகளுக்கு நீர்ப்பாசனமாக திகழ்கிறது.
இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு மண் தேவை என்றால் அருகில் இருக்கும் ஏரியில் அரசு விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட சுரங்க துறை மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மண் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பசுமத்தூர் ஏரியிலிருந்து அளவுக்கு அதிகமாக ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண் கொள்ளை நடைபெற்று வருகிறது.
டிப்பர் லாரிகளில் இருந்து செல்லும் மண் விவசாயத்திற்காக பயன்படுத்தாமல், அருகில் இருக்கும் தனியார் மனைப்பிரிவில் உயரம் ஏற்றுவதற்காகவும், தனியாருக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தனியார் பணிகளுக்காக அளவுக்கு அதிகமாக மண் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு டிப்பர் லாரிக்கு ரூ.2500 முதல் ரூ.3000 வரையிலும் டிராக்டருக்கு 1,200 முதல் 1,800 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகஅப்பகுதி மக்கள் பலமுறை பொதுப்பணித்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்த ஒரு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டும் கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியில் மண் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஏரியையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும், விவசாய தேவைக்காக மட்டுமே, மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கே.வி.குப்பம் அருகே டிப்பர் லாரிகள் மூலம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் கொள்ளை appeared first on Dinakaran.