குமரி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்,கட்டுனர் பணிக்கு நேர்முக தேர்வு

*41 பணியிடங்களுக்கு 5989 பேர் விண்ணப்பம்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு நேர்முக தேர்வு நேற்று தொடங்கியது.தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் 3 ஆயிரத்து 308 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதில் மாவட்டம் தோறும் தனித்தனியே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இவற்றுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 7ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விற்பனையாளர் பணிக்கு தொகுப்பூதியம் ரூ.6250 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8600 முதல் ரூ.29000 எனவும், கட்டுனர் பணிக்கு தொகுப்பூதியம் ரூ.5500 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7800 முதல் ரூ.26 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரர்களில் 10 மற்றும் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடி பணி நியமனம் நடைபெறும்.

கல்வி தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து அதிக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் பணி நியமனம் வழங்கப்படும். குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் அரசின் ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் விற்பனையாளர் பணிக்கு 5200 பேரும், கட்டுனர் பணிக்கு 789 பேரும் என்று மொத்தம் 5989 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று காலையில் தொடங்கியது.

தினமும் காலையில் 500 பேருக்கும், பிற்பகல் 500 பேருக்கும் என்று நேர்முக தேர்வு நடத்த அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கேற்ப தேர்வு நடைபெறுகிறது. இந்த நேர்முக தேர்வு ஏழு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேர்முக தேர்வு நடைபெறுவதை கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சிவகாமி நேரடியாக ஆய்வு செய்தார்.

பி.இ., எம்.பி.ஏ படித்தவர்களும் ஆர்வம்

ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு நேர்காணல் நாகர்கோவிலில் டிசம்பர் 3ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நேர்காணல் நடைபெறுவது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுனர் பணிக்கு 10ம் வகுப்பும், விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பும் கல்வி தகுதியாக இருந்த போதிலும் பி.இ,எம்.பி.ஏ படித்தவர்கள் உட்பட முதுகலை பட்டதாரிகளும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் நேர்முக தேர்வில் பங்கேற்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post குமரி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்,கட்டுனர் பணிக்கு நேர்முக தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: