*3 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்
சுசீந்திரம் : நாகர்கோவில் அருகே காரில் கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்ய இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
காரும் பறிமுதல் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வருடத்தில் மட்டும் 100 கஞ்சா வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு, 170 குற்றவாளிகளுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீஸ் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு, நாகர்கோவில் அடுத்த சுசீந்திரம் காவல் நிலையத்துக்குட்பட்ட 18ம் படி அருகே உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கட்டிடம் அருகே காரில் 4 பேர் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்வதாக, சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, எஸ்.ஐ. அனுஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் தப்ப முயன்றனர்.
அவர்களில் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பினார். பின்னர் காரில் சோதனை செய்த போது, காரில் கஞ்சா பார்சல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இடலாக்குடி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த பாபு உசேன் (30), இரணியல் அடுத்த கட்டிமாங்கோடு வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சகாய கவின் (25), பறக்கை செட்டித்தெரு பகுதியை சேர்ந்த ஆஷிப் சாக்லைன் (28) என்பதும், தப்பி ஓடியவர் காட்டுப்புதூர் காற்றாடிவிளையை சேர்ந்த தனீஷ்குமார் (30) என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து, கார் மற்றும் அதில் இருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். இதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்ததாக கூறி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய தனீஷ்குமாரையும் தேடி வருகிறார்கள்.
The post நாகர்கோவில் அருகே காரில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.