கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி: கோயில் பணியாளர் சங்கத்தினர் நன்றி

சென்னை: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதி உதவி செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோயில் பணியாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கடந்த 18ம் தேதி கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயகுமார் மற்றும் உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்லையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டது.

முதல்வர் உத்தரவின்படி, உயிரிழந்த யானை பாகன் உதயகுமார் திருக்கோயில் பணியாளர் என்பதால் அவருடைய மனைவிக்கு கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் திருக்கோயிலில் பணி நியமனமும், சிசுபாலனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செந்தூர் கிளை தலைவர் பால்ராஜ் தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ஞானசேகரனை சந்தித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறியதுடன் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்கு பேருதவியாய் இருந்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கனிமொழி எம்.பி., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கடிதம் அளித்தனர்.

The post கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி: கோயில் பணியாளர் சங்கத்தினர் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: