உடுமலை: வடகிழக்கு பருவமழையால் பீட்ரூட் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளதாக உடுமலை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் கரும்பு உள்ளிட்டவை பிரதான சாகுபடியாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, பூசணி, புடலங்காய், பாகற்காய் மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மொடக்குபட்டி, தீபாலபட்டி, வாளவாடி, தளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 500 ஏக்கருக்கும் அதிகமாக பீட்ரூட் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர்.
60 நாள் பயிரான பீட்ரூட்சாகுபடி விதை விதைத்த நாள் முதல் இரு மாதங்களில் விவசாயிகள் தங்கள் போட்ட கொள்முதலை எடுக்கும் வகையில் கை கொடுக்கும் தொழிலாக அமைந்திருந்தது. ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு கிலோ விதைகளை வாங்கி விதைத்தால், சரியான கால நிலை சீதோசன நிலை நிலவினால் ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் பெற முடியும்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பீட்ரூட் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக பீட்ரூட் செடிகளில் அழுகல் ஏற்பட்டு காய்கள் பருக்கவிடாமல் சிறிதாக காணப்பட்டது. ஏக்கருக்கு 10 டன் மகசூல் கிடைக்கும் சாகுபடி பரப்பில் 2ல் இருந்து மூன்று டன் மட்டுமே விளைச்சலை எடுக்க முடிந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து மொடக்குப்பட்டி பகுதியில் பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில், ரூ.1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை செலவு செய்து விதைகள் வாங்கி நடவு மேற்கொண்டு, களை எடுப்பது, அடி உரம், தொழு உரம் போடுவது என ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவழித்து உள்ளோம். மகசூலை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் செடிகள் அனைத்தும் அழுக தொடங்கின. இதனால் உடனடியாக அறுவடை பணிகளில் ஈடுபட்டு மகசூலை பார்த்த போது நான்கில் ஒரு மடங்கு மட்டுமே கிடைத்தது.
தற்போது பீட்ரூட் கிலோ ரூ.30க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. உடுமலையிலிருந்து திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் பீட்ரூட் லோடு அனுப்பப்பட்டு வருகிறது. சபரிமலை சீசன் என்பதால், பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் ஓட்டல்களுக்கு பீட்ரூட் சப்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. விலை வீழ்ச்சி, மகசூல் அதிகரிக்காததால் போட்ட கொள்முதலை எடுப்பதில் மிகுந்த சிரமமாக உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினார்.
The post வடகிழக்கு பருவமழையால் பீட்ரூட் மகசூல் பாதிப்பு: உடுமலை விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.