நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கேன்! நடிகை சாந்தி கிருஷ்ணா

நன்றி குங்குமம் தோழி

பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு படங் களில் நடித்த சாந்தி கிருஷ்ணாவை தமிழ் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. தமிழில் இவர் அதிகளவு படம் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்த ஒரு சில படங்களை யாராலும் மறக்க முடியாது. தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் தன் சினிமா பயணம் குறித்து மனம் திறந்தார்.‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில். அப்பா குவைத்தில் வேலை பார்த்து வந்தார். அதனால் மும்பை, குவைத்துன்னு மாறி மாறி இருப்போம். நான் வீட்டில் சின்னத்தம்பி குஷ்பு மாதிரி. மூன்று அண்ணன்கள், கடைக்குட்டியாக நான். பெரிய அண்ணா ஸ்ரீ ராம், என்னோட பெங்களூரில் இருக்கார். இரண்டாவது அண்ணன் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணன். கடைசி அண்ணா அமெரிக்காவில் இருக்கார்.

எனக்கு நடனம் பிடிக்கும் என்பதால், ஆறு வயசில் இருந்தே பரதம் கற்றுக்ெகாள்ள ஆரம்பித்தேன். நிறைய நடன நிகழ்ச்சிகள் செய்திருக்கேன். அதில் இந்திய அரசு, பரத கலைக்காக ஸ்காலர்ஷிப் கொடுத்தாங்க. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தமிழ் பொண்ணுக்கு பரதத்துக்கு ஸ்காலர்ஷிப் கிடைப்பது முதல் முறை என்பதால், பிரபல தினசரியில் என் புகைப்படத்துடன் செய்தியாக வந்தது. அப்போது அண்ணா சுரேஷ் கிருஷ்ணன் இயக்குனர் கே.பாலசந்தர் சாரிடம் அசிஸ்டென்டா இருந்தார். அந்த செய்தியை பார்த்த மலையாள இயக்குனர் பரதன், நான் சுரேஷின் தங்கை என்பதால் அண்ணனிடம் அவரின் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க கேட்டார். அப்ப நான் மும்பையில் படிச்சிட்டு இருந்தேன்.

அண்ணன் என்னிடம் சொன்ன போது, உடனே நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். வீட்டில்தான் யோசிச்சாங்க. ஆனால் அண்ணன்தான் இந்த வாய்ப்பு கிடைக்காது, நடிக்கட்டும், பிடிக்கலைன்னா கட்டாயம் இல்லைன்னு சொன்னார். அப்படித்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். நான் நடிச்ச முதல் மலையாள படம் ‘நித்ரா’. அந்த சமயத்தில் பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கும் ஹீரோயின் வாய்ப்பு வந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மொழி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானேன்’’ என்றவர், தன்னுடைய நடிப்பு அனுபவம் குறித்து பேசத் துவங்கினார்.

‘‘நடன நிகழ்ச்சி செய்திருந்ததால் எனக்கு கேமரா பயம் ஏற்படல. நித்ராவில் விஜய் மேனன்தான் எனக்கு ஜோடி. அவருக்கும் முதல் படம். நாங்க கணவன்- மனைவியாக நடிச்சோம். ஆனால் பன்னீர் புஷ்பங்கள் அப்படியே என் வயசுக்கு ஏற்ற பள்ளி மாணவி கதாபாத்திரம். ஊட்டியில் ஷூட்டிங். படத்தின் கதாநாயகன் சுரேஷுக்கும் இதுதான் முதல் படம். ஸ்கூல், நண்பர்கள் சார்ந்த படம் என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டே ரொம்பவே ஜாலியா இருக்கும். இந்த இரண்டு படங்களும் சினிமா துறையில் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு எனக்கு மலையாள படத்தில் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதனால் என்னால் பெரிய அளவில் தமிழ் திரையுலகில் கவனம் செலுத்த முடியவில்லை என்றாலும் மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், சிகப்பு மல்லி போன்ற படங்கள் இன்று வரை எனக்கு தமிழ் திரையுலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணல் கயிறில் ஆச்சி அவர்களுடன் நடிச்சது எனக்கு நல்ல ஒரு அனுபவத்தை தந்தது. நடிப்பு சார்ந்த விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. நான் கடைசியாக நடிச்ச தமிழ் படம் ‘நேருக்கு நேர்’ என்றவர் திருமணத்திற்குப் பிறகு சுமார் பத்து வருடம் கழித்துதான் மீண்டும் சினிமாவில் கால் பதித்திருக்கார். ‘‘20 வயசில் கல்யாணமாச்சு. கேரளாவிற்கு குடி பெயர்ந்தோம். சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினேன். நடனத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சொல்லப்போனால் நான் ஒரு நடிகை என்பதே மறந்தேன். ஆனால் என் இல்லற வாழ்க்கை எனக்கு பெரிய துயரத்தை கொடுத்தது. அந்த வாழ்க்கையில் இருந்து விலகினேன். அந்த சமயத்தில்தான் ‘நயம் வ்யெத்தமாகுன்னு’ மலையாள படத்தில் மம்மூட்டி அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் நான் மனதால் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்ேதன்.

அந்த நேரத்தில் என்னால் நடிக்க முடியும்னு தோணல. மம்மூட்டிதான் நடிக்கச் சொல்லி சொன்னார். முதல் நாள் ஷூட்டிங் முதல் டேக்கே ஓ.கே ஆனது. இயக்குனர் எல்லோரும் உங்களால் முடியும்னு ஊக்கம் கொடுத்தாங்க. என்னாலும் முடியும்னு நம்பிக்கை வந்தது. மீண்டும் நடிக்க வந்தேன். மோகன்லாலுடன் ‘விஷ்ணு லோகம்’, ஜெயராமுடன் ‘என்னும் நன்மக்கள்’ என மலையாளத்தில் மீண்டும் ஒரு வலம் வந்தேன். நான் நடித்த ‘சவிதம்’, ‘சக்கோரம்’ படங்களுக்கு சிறந்த நடிகைன்னு கேரள மாநில விருது கிடைச்சது. ஆனால் மீண்டும் எனக்கு திருமணமானதால் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினேன்.

அமெரிக்காவில் என் புது வாழ்க்கையை துவங்கினேன். அமெரிக்கா, பெங்களூர், நடனம், பசங்க, படிப்புன்னு என் நாட்கள் கழிந்தது. இப்ப பையன் நியூயார்க்கில் வேலை பார்க்கிறான். பொண்ணும் அங்கு கல்லூரியில் படிக்கிறாள். இந்த இல்லற வாழ்க்கையில் இருந்து விலகிய போது மீண்டும் எனக்கு தோள் கொடுத்தது சினிமாதான். அப்ப நான் அமெரிக்காவில் இருந்தேன். எப்படியோ என்னை தொடர்பு கொண்டு, நீங்கதான் அந்த கதாபாத்திரம் செய்யணும்னு கேட்டுக் கொண்டாங்க. நிவின்பாலி தயாரிப்பில் ‘நஞ்சுடுகளுடே நாட்டில் ஒரு இடவேள’ படம் மூலம் மீண்டும் சினிமாவில் எனக்கு என்ட்ரி கிடைத்தது.

அந்தப் படத்தில் ஷீலா சாக்கோ என்ற முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்தேன். சொல்லப்போனால் அந்த கதாபாத்திரம்தான் கதையின் நாயகி. அதில் நான் கேன்சர் பேஷன்டாக நடிச்சிருந்ேதன். வாழ்க்கையின் இறுதி நாட்களில் இருக்கும் சமயத்தில் எப்படி அந்தக் குடும்பத்தை ஒன்றாக இணைக்கிறேன் என்பதுதான் கதை. அந்தக் கதாபாத்திரத்திற்கு பிலிம்ஃபேர் விருது கிடைச்சது.

அதன் பிறகு தொடர்ந்து மலையாள பட வாய்ப்பு வரத்துவங்கியது. ‘குட்டான்டன் மாரப்பா’ படத்தில் குஞ்சாக போபனுக்கு அம்மாவா நடிச்சேன். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ‘மாஸ்டர்பீஸ்’ என்ற மலையாள வெப் தொடரில் நித்யாமேனனின் அம்மாவாக நடிச்சேன். என்னைப் பொறுத்தவரை திரையில் அம்மா கதாபாத்திரம் என்றாலும், பேசப்படணும் என்று விரும்பினேன். அதனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் தேர்வு செய்து நடிச்சேன். அம்மா கதாபாத்திரம் மட்டுமில்லாமல் மற்ற சப்போர்டிங் கதாபாத்திரமாக இருந்தாலும், மக்களால் கவனிக்கப்பட வேண்டும்.

நான் 80களில் இருந்து இந்த துறையில் இருக்கிறேன். இப்போது நான் ஏற்று நடிக்கக்கூடிய கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயம் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கணும். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பாக பெண் இயக்குனர்கள் ஒரு படம் செய்தாங்க. ‘நிரா’ என்ற அந்தப் படத்தில் 75 வயது முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட மகப்பேறு நிபுணராக நடிச்சேன். முழுக்க முழுக்க படுக்கையில் படுத்துக் கொண்டு தான் நடிக்கணும். அந்தப் படத்திற்கு டப்பிங் செய்யும் போதும் ரிக்லைனர் சேரில் படுத்துக் கொண்டுதான் பேசினேன். அப்பதான் அந்த வாய்ஸ் மாடுலேஷன் தர முடியும். என் மனசுக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம். இது போன்ற நல்ல கதாபாத்திரம் வந்தால் நடிக்க நானும் தயார்’’ என்றவரிடம் அவர் நடிச்சதில் மனசுக்குப் பிடிச்ச கதாபாத்திரம் குறித்து கேட்ட போது…

‘‘என்னோட முதல் படமான நித்ரா, பன்னீர் புஷ்பங்கள். சிறந்த நடிகைன்னு விருது வாங்கிக் கொடுத்த சகோரம், சவிதம், நஞ்சுடுகளுடே நாட்டில் ஒரு இடவேள, நிரா மலையாளப் படங்கள் மனசுக்கு நெருக்கமானவை. தமிழில் மணல் கயிறு, நேருக்கு நேர் சொல்லலாம். தெலுங்கு, கன்னடத்தில் ஒரு படங்கள் செய்திருந்தாலும், நிறைய மலையாள படத்தில் தான் நடிச்சிருக்கேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல், சினிமா அல்லது வெப் தொடரில் வித்தியாசமான கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பா நடிக்க தயார். அதேசமயம் மெகா சீரியலில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை. தூர்தர்ஷனில் வரும் நாடகத்தில் அதிகபட்சம் பதிமூன்று எபிசோட்கள்தான் இருக்கும். ஆனா, இப்ப வருஷக்கணக்கா ஒரு சீரியல் போவதால், அதில் கெஸ்ட் அப்பியரன்சா வரலாமே தவிர முழுமையாக நடிக்க எனக்கு நேரமில்லை’’ என்றார் சாந்தி கிருஷ்ணா.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: வெங்கடேஷ்

The post நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கேன்! நடிகை சாந்தி கிருஷ்ணா appeared first on Dinakaran.

Related Stories: