*பேட்டரி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாகர்கோவில் : மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ₹23 லட்சம் மதிப்புள்ள பேட்டரியில் இயங்கக்கூடிய 11 லோடு ஆட்டோக்கள் பழுதடைந்து பரிதாப நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஒன்றிய அரசு அகில இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்து இதற்காக பல கோடி நிதி ஒதுக்கி உள்ளது.மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை உரத்திற்காகவும், மக்காத குப்பை சிமென்ட் ஆலைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்காக பேட்டரியில் இயங்கக்கூடிய லோடு ஆட்டோக்களை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இந்த லோடு ஆட்டோ குக்கிராமங்களில் உள்ள சிறிய ரோடுகளிலும் சென்று குப்பைகளை எடுக்க வாய்ப்பாக உள்ளது.மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவிகோடு, முழுக்கோடு, வெள்ளாங்கோடு, வன்னியூர், மலையடி ஆகிய 5 கிராம ஊராட்களுக்கு தூய்மை இந்தியா 2022- 23 திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கக்கூடிய 11 லோடு ஆட்டோக்கள் கடந்த 2022ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை பாரத் நகரில் செயல்படும் தனியார் நிறுவனம் 2022ம் ஆண்டு மே மாதம் பேட்டரியில் இயங்கக்கூடிய 11 லோடு ஆட்டோக்களை கொண்டு வந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தினர். ஆனால் பேட்டரி பொருத்தப்படவில்லை.
கடந்த 2 வருடங்களாக இந்த 11 வாகனங்களும் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து வருகின்றன.இந்த வாகனங்கள் ஒரே இடத்தில் நிற்பதால் மரங்களில் உள்ள இலை, தழைகள் விழுந்து மக்கி பரிதாப நிலையை எட்டி உள்ளது. மேலும் வாகனங்கள் துருப்பிடித்து காணப்படுகிறது. டயர்களில் காற்று இல்லாமல் பழுது அடைந்துள்ளது. மின்சார ஒயர்களை எலிகள் கடித்து சேதமாகியுள்ளது.ஒரு வாகனத்தின் மதிப்பு ₹2 லட்சத்து 9 ஆயிரத்து 420 ஆகும். மொத்த மதிப்பு ₹23 லட்சம் ஆகும்.
தனியார் நிறுவனம் பேட்டரியை பொருத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். வாகனத்தில் டிரைவர் இருக்கும் சீட்டின் பிளாஸ்டிக் கவர் கூட இன்றுவரை எடுக்கப்படவில்லை. பயன்படுத்தாமலேயே பரிதாப நிலையை அடைந்து வருகிறது.இதே நிலைமையில் சென்றால் ஓரிரு மாதங்களில் ₹23 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் இரும்பு விலைக்கு ஆக்கர் கடைக்கு கொடுக்க வேண்டிய நிலையை எட்டும். நம் வரிப் பணம் வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து காங். மனித உரிமை துறை மேற்கு மாவட்ட தலைவர் டான்பெறின் கூறியதாவது:பேட்டரி பொருத்தப்படாமலே இந்த வாகனங்கள் பழுதுபட்டு விட்டது. நம் முடைய வரிப் பணம் வீணாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் காண்ட்ராக்ட் எடுத்து இந்த வாகனத்தை இங்கே கொண்டு வந்துள்ளது. 2 ஆண்டுகள் கடந்த பிறகும் பேட்டரியை பொருத்த வில்லை.
அப்படி என்றால் இந்த வாகனத்திற்கான மொத்த கட்டணத்திற்கான செக்கை எப்படி கொடுக்கலாம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து வாகனத்தை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் புதிய வாகனம் வருகை
தூய்மை இந்தியா திட்டத்தில் 2022ம் ஆண்டு வந்த பழைய வாகனமே இதுவரை பயன்படுத்தவில்லை. அதற்குள் இந்த ஆண்டு மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்த 9 வாகனங்களை 2 மாதத்திற்கு முன் கொண்டு வந்து மேல்புறம் பஞ். அலுவலகத்தில் வேளாண்மை விவசாய அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உள்ளே குப்பைகள் சேகரிக்கும் பெரிய பிளாஸ்டிக் பக்கெட் உள்ளது. இவையும் 2 மாதமாக வெயிலில் காய்ந்து வருகிறது.
The post மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 ஆண்டாக பரிதாப நிலையில் நிற்கும் 11 லோடு ஆட்டோக்கள் appeared first on Dinakaran.