×
Saravana Stores

3ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா தாக்கல் செய்த மனுவில், 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. தன்னை சிறப்பு பிரிவினராக கருதவில்லை. இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது. எனவே, தனக்கு கால்நடை மருத்துவ படிப்பில் இடம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருநங்கை நிவேதா வரும் 25ம் தேதி (நாளை) கால்நடை பல்கலைக்கழக பதிவாளரை சந்தித்து, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

அவர் அளித்த விண்ணப்பத்தை பெற்று தமிழ்நாடு கால்நடை விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் மனுதாரரை மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அப்போது, அரசு தரப்பில், 3ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசின் 5 துறைகள் ஒப்புதல் வழங்கி உள்ளது. அனைத்து துறைகளின் ஒப்புதல் பெற்று கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது. 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவு எடுப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கொள்கை முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post 3ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Niveda ,Madras High Court ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை...