இதில் 6 தொகுதிகளில் பா.ஜ, 2 தொகுதிகளில் சமாஜ்வாடி, ஒரு தொகுதியில் ராஷ்ட்ரீய லோக்தளம் வென்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் 7 தொகுதிகளில் 5ல் பா.ஜவும், ஒரு தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சியும், தவுசா தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தில் 4 தொகுதிகளில் 3ல் ஆம்ஆத்மியும், ஒரு தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றன. அசாம் மாநிலத்தில் 5 தொகுதியில் 3 தொகுதியில் பா.ஜ, ஒரு தொகுதியில் அசாம் கனபரிசத், ஒரு தொகுதியில் லிபரல் ஐக்கிய மக்கள் கட்சியும் வெற்றி பெற்றன.
பீகார் மாநிலத்தில் 4 தொகுதியிலும் பா.ஜ கூட்டணி வென்றது. கர்நாடகாவில் 3 தொகுதியிலும் காங்கிரஸ் வென்றது. மபியில் ஒரு தொகுதியில் காங்கிரசும், ஒரு தொகுதியில் பா.ஜவும் வென்றது. கேரளாவில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றது. சட்டீஸ்கரில் ஒரு தொகுதியிலும், குஜராத்தில் ஒரு தொகுதியிலும், உத்தரகாண்ட்டில் ஒரு தொகுதியில் பா.ஜவும் வென்றது. மேகாலயாவில் ஒரு தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வென்றது.
மொத்தத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 48 இடங்களில், பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 26 இடங்களில் வெற்றி பெற்றன. அந்த கட்சிகள் 9 இடங்களை கூடுதலாக பிடித்துள்ளன. காங்கிரஸ் 7 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களை பறிகொடுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 6 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 3 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. கேரளாவில் இடதுமுன்னனி மற்றும் ராஜஸ்தானில் பாரத் ஆதிவாசி கட்சிக்கு தலா ஒன்று கிடைத்தது. சிக்கிம் மாநிலத்தில் இரண்டு இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வேட்பாளர்கள் போட்டியின்றி வென்றனர்.
2. மேகாலயா முதல்வர் மனைவி வெற்றி: மேகாலயாவில் காம்பேக்ரே தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் முதல்வர் கான்ராட் சர்மா மனைவி மெஹ்தாப் சண்டி அகிடோக் சங்மா போட்டியிட்டார். அவர் இடைத்தேர்தலில் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
3. மபி அமைச்சர் தோல்வி: மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜவுக்கு பலத்த அடியாக, விஜய்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமைச்சர் ராம்நிவாஸ் ராவத், காங்கிரஸின் முகேஷ் மல்ஹோத்ராவிடம் 7,364 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
* சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கும் காங்கிரஸ்: பிராந்திய கட்சிகளே ஆதிக்கம்
சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசின் சறுக்கல் இம்முறையும் நீடித்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலத்திலும் காங்கிரசின் தனிப்பட்ட செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக, மகாராஷ்டிராவில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. மகாவிலாஸ் அகாடி கூட்டணியில் அதிகமாக 101 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு வெறும் 15இடங்களில் மட்டும் வென்றுள்ளது. அதுவே, உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) 86 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களிலும் வென்றுள்ளன.
இதற்கு முன், அரியானாவில் பாஜ ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவிய போதிலும், அதை ஓட்டுகளாக மாற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க தவறியது. வெற்றியை கோட்டை விட்டது. இதே போல, இம்முறை மகாராஷ்டிராவிலும் பாஜ மீதான மக்களின் அதிருப்தியை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க தவறி உள்ளது. ஜார்க்கண்டில் மீண்டும் கூட்டணி ஆட்சியை தக்க வைத்தாலும், அதில் காங்கிரசின் பங்கு பெரிய அளவில் இல்லை. அங்கு ஆட்சியை பிடிக்க முழுக்க முழுக்க ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் மட்டுமே காரணம். அவர்கள் மட்டுமே 81 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் செய்து ஆட்சியை காப்பற்றி உள்ளனர்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தாலும் அந்த வெற்றி பிராந்திய கட்சியான தேசிய மாநாட்டு கட்சியால்தான் கிடைத்தது. அதன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வெற்றிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இதே கதைதான் ஜார்க்கண்டிலும். நேற்றைய தேர்தல் முடிவை பொறுத்த வரையிலும் காங்கிரசுக்கு ஆறுதலான விஷயங்கள், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றது மற்றும் கர்நாடகாவில் 3 தொகுதி இடைத்தேர்தலிலும், கேரளாவில் பாலக்காடு இடைத்தேர்தலிலும் வென்றது மட்டுமே.
அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற போதே, மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் அக்கட்சி போட்டியிட உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் விரும்பவில்லை. ஆனாலும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் அடம்பிடித்தது. ஜார்க்கண்டிலும் ஜேஎம்எம் உடன் தொகுதி பங்கீட்டில் பிரச்னை செய்தது. அதே சமயம், ஒவ்வொரு தேர்தலிலும் பிராந்திய கட்சிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பிராந்திய கட்சிகள் மூலமாக மட்டுமே காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் தப்பித்து வருகிறது. இதனால், வரும் 2025ம் ஆண்டிலாவது காங்கிரஸ் பிரசார உத்தியை வெற்றியை நோக்கி மாற்றிக் கொள்ள வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அரசியல் நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
The post 13 மாநிலங்கள், 48 சட்டப்பேரவை தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகள்: பா.ஜ கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி; காங்.7ல் வெற்றி; 6 தொகுதியை பறிகொடுத்தது; மபியில் பா.ஜ அமைச்சர் தோல்வி appeared first on Dinakaran.