ஜார்க்கண்டில் பாஜ பஞ்சர்: கெத்து காட்டிய கல்பனா-ஹேமந்த்; அனைத்து பந்திலும் சிக்சர் விளாசி வென்றனர்

பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீழ்த்த பாஜ பலமான சூழ்ச்சிகளை மேற்கொண்டது. அம்மாநில முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் பல ஊழல் வழக்குகள் போட்டு கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தனர். கடந்த ஜூன் 28ம் தேதி ஜாமீன் பெற்ற ஹேமந்த் சோரன், ஜூலை 3ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேர்தல் நெருங்கும் நிலையில் ஹேமந்த் சோரனின் கைது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையே தனது பிரசார உத்தியாக பாஜ மாற்றியது. பழங்குடி மக்களிடம் உள்ள செல்வாக்கை குறைக்க, ஹேமந்த் சோரனை ஊழல்வாதி என முத்திரை குத்தியது. ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து 5 மாதம் இடைக்கால முதல்வராக இருந்த சம்பாய் சோரனை பாஜ தன்வசம் இழுத்தது. அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டதாகவும், ஹேமந்த் சோரன் ஆட்சியில் பழங்குடி மக்கள் இப்படித்தான் அவமதிக்கப்படுகிறார்கள் என்றும் பிரசாரம் செய்தது. சிபு சோரனின் மூத்த மருமகளான சீதா சோரனை பாஜ தன்வசம் இழுத்து ஹேமந்த் சோரனின் குடும்ப உறுப்பினர்களையே எதிரிகளாக்கி களமிறக்கியது.

இதுமட்டுமின்றி, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என ஒட்டுமொத்த பாஜ மேலிடமும் ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரம் செய்தது. பல்வேறு மாநில பாஜ முதல்வர்களும் ஜார்க்கண்டில் சந்து, பொந்து புகுந்து பிரசாரம் செய்தனர். ஆனால் பாஜ போட்ட அத்தனை பந்தையும் சிக்சர் விளாசி, ஹேமந்த் சோரனும் அவரது மனைவி கல்பனா சோரனும் செம்ம கெத்து காட்டி உள்ளனர். கணவர் கைது செய்யப்பட்டப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியலில் அடியெடுத்து வைத்தவர் கல்பனா சோரன். இவரை பாஜ வெளியாள் என்றது.

தங்களின் வேட்பாளர் மண்ணின் மகள் என்றும் கல்பனா போன்ற வெளியாட்களை ஆதரிக்க வேண்டாம் என்றும் பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜ செய்தது. ஆனால், கல்பனா சோரன் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் மட்டுமே 200 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று கட்சிக்கு வாக்கு சேகரித்தார். இதனால் பாஜ சொன்னது போல் இவரை ஜார்க்கண்ட் மக்கள் வெளியாளாக பார்க்கவில்லை. தனது அயராத பணியின் மூலம் எதிர்மறை விமர்சனங்களை தகர்த்தெறிந்தார் கல்பனா. ஹேமந்த் சோரனின் கைது விவகாரத்தை அனுதாப ஓட்டுக்களாக மாற்றினார். அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பாஜ அடக்கப் பார்ப்பதை மக்கள் மன்றத்தில் முன்வைத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

ஹேமந்த் சோரனும் பல நலத்திட்டங்கள் மூலம் மக்களை கவர்ந்தார். குறிப்பாக, மய்யன் சம்மன் யோஜனா எனும் மகளிர் நிதி உதவித் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000க்கு பதிலாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அடுத்த மாதம் முதல் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் அறிவிப்பை வெளியிட்டார். இது ஒட்டுமொத்த பெண்களின் ஓட்டை ஜேஎம்எம் பக்கம் திருப்பியது. இதுதவிர, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை ரத்து செய்தார். இதன் மூலம் 1.75 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்தனர். 200 யூனிட் இலவச மின்சாரம், உலகளாவிய பென்சன் திட்டம் போன்ற ஜேஎம்எம் வாக்குறுதிகள் ஓட்டுகளாக மாறின. இதன் மூலம் 43 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேஎம்எம் 34 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

* ‘ஹெலிகாப்டர் மேடம்’
பிரசாரத்தின் போது, கல்பனா சோரனை ‘ஹெலிகாப்டர் மேடம்’ என பாஜ கிண்டலடித்தது. ஒவ்வொரு நாளும் அதிகமான பிரசாரத்தில் பங்கேற்க வேண்டுமென கல்பனா சோரன் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததால் இவ்வாறு விமர்சித்தனர். ஆனால் அரசியலில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத இந்த ஹெலிகாப்டர் மேடம் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி விட்டார். கட்சியை வெற்றி பெறச் செய்ததோடு கண்டே தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் ஆகி விட்டார். இதனால் ஹேமந்த் சோரனை ஒழிக்கப் போய் இப்போது அவரைப் போன்ற வலுவான இன்னொரு தலைவராக கல்பனா உருவெடுத்து விட்டதால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது.

* ஜார்க்கண்டில் தோற்றாலும் அதிக வாக்குகள் பெற்ற பாஜ
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பாஜ கட்சி தோல்வி அடைந்தாலும் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது. மொத்தம் 81 தொகுதிகளில் 68ல் போட்டியிட்ட பாஜ 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2019 தேர்தலில் பெற்ற இடங்களை விட 4 குறைவு. ஆனாலும், 34 தொகுதிகளில் வென்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை விட அதிக வாக்கு சதவீதத்தை பாஜ பெற்றுள்ளது. பாஜ 58.8 லட்சம் வாக்குகளுடன் 33.20 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. 43 தொகுதிளில் போட்டியிட்ட ஜேஎம்எம் 41.6 லட்சம் வாக்குகள் பெற்று 23.49 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 30 தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களில் வென்ற காங்கிரஸ் 15.45 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலிலும் காங்கிரஸ் 16 இடங்களையே கைப்பற்றியிருந்தது. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்:

இந்தியா கூட்டணி
கட்சி போட்டியிட்ட தொகுதி வெற்றி வாக்கு சதவீதம்
ஜேஎம்எம் 43 34 23.48%
காங். 30 16 15.46%
ஆர்ஜேடி 7 4 3.46%
சிபிஐஎம்எல் 4 2 1.86%
தேஜ கூட்டணி
பாஜ 68 21a 33.20%
ஏஜேஎஸ்யு 10 1 3.56%
ஜேடியு 2 1 0.80%
எல்ஜேபிஆர்வி 1 1 0.61%
பிற கட்சிகள்
பகுஜன் சமாஜ் 53 0 0.79%
ஏஐஎம்ஐஎம் 7 0 0.10%
சிபிஐ 11 0 0.20%
சமாஜ்வாடி 20 0 0.73%
என்சிபி 20 0 0.10%
நோட்டா – 0 1.27%
மற்றவை – 0 14.38%

The post ஜார்க்கண்டில் பாஜ பஞ்சர்: கெத்து காட்டிய கல்பனா-ஹேமந்த்; அனைத்து பந்திலும் சிக்சர் விளாசி வென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: