ஆளாளுக்கு ஒன்னு சொல்லுராங்க; மகாராஷ்டிரா முதல்வர் யார்..?

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மொத்தம் 9.70 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தேர்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995, பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன. எதிர்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ் தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 86 தொகுதிகளில் களம்கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் அபார வெற்றியுடன் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கிறது. 217 இடங்களில் இக்கூட்டணி முன்னிலையில் உள்ளது காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்னாவிசுக்கு முதல்வர் பதவி என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பெரிய கட்சிக்கு தான் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எங்கும் செய்யப்படவில்லை என ஏக்நாத் ஷிண்டே கூறினார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து என் அப்பா தான் முதல்வர் என ஷிண்டேவின் மகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் வெற்றி நிலவரங்கள் வந்து கொண்டிருக்க அஜித்பவார் தான் முதல்வர் என அவரது மனைவி பேட்டியளித்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்காக ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.

The post ஆளாளுக்கு ஒன்னு சொல்லுராங்க; மகாராஷ்டிரா முதல்வர் யார்..? appeared first on Dinakaran.

Related Stories: