×
Saravana Stores

2026 சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவின் கூட்டணி கனவு தகர்ந்தது: வாக்கு வங்கியை இழுக்க தவெக, பாஜ திட்டம்

சென்னை: வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கனவு தகர்ந்தது. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியை இழுக்க தவெக, பாஜ திட்டமிட்டுள்ளது. தவெகவின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்தது. அதில் தவெக தலைவர் நடிகர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசியதும் அதிமுக குறித்து எதுவுமே பேசாததும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதிமுகவினரும் விஜய் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர இருக்கிறார். அதனால் தான் அதிமுகவை தாக்கி எதுவும் பேசவில்லை என நம்பி விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். எடப்பாடி பழனிசாமியும் விஜய்யுடன் கூட்டணி அமையும், அதனால் விஜய்க்கு எதிராக எந்த கருத்தும் சொல்ல வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதிமுக நிர்வாகிகளிடத்திலும் பாஜவோ, திமுவின் பிற கூட்டணி கட்சிகளோ வேண்டாம், தவெக உடன் கூட்டணி அமைய இருக்கிறது. அதுபோதும் நாம் வெற்றி பெற அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என நம்பிக்கை கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் “அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எந்த பேச்சும் நடக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. நாங்கள் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்போம்” என தவெக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இது அதிமுகவின் பல இரண்டாம் கட்டத் தலைவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.

கூட்டணி அமையவில்லை என்பதை விடவும், இது அதிமுகவுக்கான அவமானம் என்று கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று தொடங்கிய விஜய் கட்சியும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளின் 2026 வெற்றிக்கனவை தகர்த்து விட்டது. அது அவர்களின் பேச்சிலேயே வெளிப்பட தொடங்கிவிட்டது. அதிமுகவின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் வெளிப்படையாக விமர்சித்து பேச தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் சீனிவாசன் ஒரு படி மேலே போய் “20 சீட்டும் 100 கோடி பணமும் கேட்கிறார்கள், கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லிய எடப்பாடியே திணறி வருகிறார்” என்ற வகையில் பேசியது பரபரப்பை உண்டாக்கியது. முன்னாள் அமைச்சர் தங்கமணி திருச்சியில் பேசிய பேச்சு, அதிமுகவினர் இடையே தீயை பற்றவைத்துள்ளது. “நமது கருத்து வேறுபாட்டால் தான் நாம் தோற்றோம். இது அப்படியே தொடர்ந்தால் 2026லும் எதிர்க்கட்சியாக தான் இருக்க வேண்டும்” என பேசியது திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கூறி உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவிற்குள் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. அதிமுக தொண்டர்களிடம் அடுத்து ஜெயிப்போமோ, கட்சி இருக்குமா என்ற சந்தேகமும் உருவாக தொடங்கி உள்ளது. ஏனெனில் தவெகவின் அரசியல் முழுக்க முழுக்க அதிமுக வாக்கினை குறிவைத்தே இருக்கிறது. அதிமுகவை விமர்சிக்க மாட்டோம். ஆனால் அதிமுகவுடன் கூட்டணியும் இல்லை என்றால் அதிமுக தொண்டர்களை கவர விஜய் முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இது ஆங்காங்கே அதிமுக தொண்டர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் தவெக பக்கம் செல்லலாமா என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜவோடு கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறார். அது அதிமுக கட்சிக்குள்ளே புகைச்சலை உண்டாக்கி வருகிறது. “கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், வலுவான கூட்டணி அமைப்போம்” என சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமியால் கடந்த தேர்தல்களில் அப்படி ஒரு கூட்டணியை அமைக்கமுடியவில்லை. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் அப்படி ஒரு கூட்டணியை அவரால் அமைக்க முடியாது என்ற நிலை உண்டாகி உள்ளது.

அதன் காரணமாக அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளுமே எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இப்படியே போனால் அதிமுக என்ற கட்சி அழிந்து விடும். அடுத்த தேர்தலில் தோல்வியுற்றால் நிச்சயம் அதிமுக காணாமல் போய்விடும் என்று வருத்தப்பட்டு வருகின்றனர். அது தான் கே.பி.முனுசாமியின் பேச்சில் வெளிபட்டது “வருகின்ற சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா என முடிவு செய்ய போகும் தேர்தல்”. இப்படி கடைசி கூட்டணி வாய்ப்பான தவெகவும் இல்லை என்பது உண்மையிலேயே அதிமுகவினரை நிலைகுலைய செய்துள்ளது. ஒரு பக்கம் பாஜ அதிமுகவை அழிக்க தேர்தல் வியூகம் அமைத்து செயல்படுகிறது. சீமானும் அதிமுகவை கைவிட்டு விட்டார். அதிமுகவின் இடத்தை பிடிக்கத்தான் பாஜவும், தவெகவும் முயற்சித்து வருகின்றன.

The post 2026 சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவின் கூட்டணி கனவு தகர்ந்தது: வாக்கு வங்கியை இழுக்க தவெக, பாஜ திட்டம் appeared first on Dinakaran.

Tags : 2026 ,Daweka ,Bajaj ,Chennai ,2026 legislative elections ,Supreme ,Daveka ,Baja ,Supreme Court ,Taweka ,Vijay ,Dinakaran ,
× RELATED 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!