ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைவதில் மிகவும் உறுதியாக இருந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதனால், ரஷ்ய அதிபர் புடினின் கோபத்திற்கு ஆளானார். விளைவு… கடந்த 2022, பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இப்போர் தற்போது 1000 நாட்களை கடந்தும் ஓயாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த 1000 நாள் யுத்தத்தில் உக்ரைன் சின்னாபின்னமாகி உள்ளது. 12,000 அப்பாவி பொதுமக்கள் பலியாகி விட்டனர். 27,000 பேர் காயமடைந்துள்ளனர். 2,400 குழந்தைகள் இறந்துவிட்டன. பல்லாயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாகி உள்ளன. 60 லட்சம் உக்ரைன் மக்கள் அந்நிய நாடுகளில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் உட்பட ஒட்டுமொத்த உட்கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டுள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இந்த போர் ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளை மட்டுமின்றி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கருங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உலகின் விநியோக சங்கிலி துண்டிக்கப்பட்டது. உக்ரைன், ரஷ்யாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டதால் ஆப்ரிக்காவில் பல நாடுகளில் பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. இதனால், இப்போர் முடிவுக்கு வராதா என உலக நாடுகள் தொடர்ந்து
காத்திருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதற்கான நம்பிக்கை ஏற்பட்டது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், 24 மணி நேரத்தில் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி இருந்தார். இனியும் அமெரிக்கா புதிய போரை தொடங்காது என டிரம்ப் உறுதி அளித்திருந்தார். இதனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் டிரம்ப் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால், 1000வது நாளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உள்பகுதிகளை தாக்கும் வல்லமை கொண்ட அமெரிக்காவின் நீண்ட தூர ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி அளித்தார். அந்த அனுமதி கிடைத்த அடுத்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவை நோக்கி அமெரிக்காவின் ஏவுகணைகளை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த புடின் தனது அணு ஆயுத கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்தார். உக்ரைன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த ஒப்புதல் அளித்தார். அதோடு நிற்காமல், உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி பதில் தாக்குதல் நடத்தி உள்ளார். எந்த நாட்டின் ஏவுகணையை கொண்டு ரஷ்யாவை உக்ரைன் தாக்குகிறதோ, அந்த நாட்டின் மீதும் அணு ஆயுத ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்துவோம் என புடின் எச்சரித்துள்ளார். இதனால், ரஷ்யா, உக்ரைன் போர் அணு ஆயுத யுத்தமாக மாறும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இது உலகின் அழிவுக்கான ஆரம்பமாக இருக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் நாட்டாமை செய்யும் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலும், உலக அரசியலும்தான் இன்று இத்தகைய அழிவின் பாதையில் அடியெடுத்து வைக்கச் செய்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ரஷ்யாவின் அருகில் தனது படைகளை நிறுத்தி அந்நாட்டை கண்காணிக்க வேண்டுமென அமெரிக்கா விரும்பியதால்தான், நேட்டோ படை மூலமாக உக்ரைனுக்கு வலை விரித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தார். இது புடினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால்தான் உக்ரைன் போர் வெடித்தது.
இந்த போர் 1000 நாட்களை கடந்து நீடிப்பதற்கும் அமெரிக்காதான் காரணம். உக்ரைனுக்கு பல ஆயுதங்களை வழங்கி, பலமான ரஷ்ய ராணுவத்தை சமாளித்து போரிட உதவியது. முதலில் தலைநகர் கீவ் வரை முன்னேறிய ரஷ்ய படைகளை, அமெரிக்காவின் ஆயுதத்தை கொண்டு உக்ரைன் பின் வாங்க வைத்தது. ரஷ்யாவின் உள்பகுதிகளை தாக்கக் கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியது. ஆனாலும், அவற்றை பயன்படுத்த தடை விதித்தது. தனது நாட்டை சின்னாபின்னமாக்கிய ரஷ்யாவுக்கு பதிலடி தர இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி கேட்டு ஜெலன்ஸ்கி பலமுறை கோரிக்கை விடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட ஒவ்வொரு மேற்குலக நாடுகளுக்கும் நேரில் சென்று மன்றாடினார். ஆனால் அமெரிக்கா செவிசாய்க்கவில்லை. இப்போது, டிரம்ப் வந்து போரை நிறுத்தி விட்டால் என்ன செய்வது என்கிற உள்நாட்டு அரசியல் பிரச்னை எழுந்ததும், அதை நடக்க விடாமல் செய்வதற்காக நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை ஏவ உக்ரைனுக்கு அனுமதி தந்துவிட்டார் பைடன். எனவே உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி விட்டது. இதனால் பிரச்னை இன்னும் சிக்கலாகி விட்டது. இன்னொரு புறம், மேற்கு உலகம் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வது போல, வடகொரியாவிடம் இருந்து படை வீரர்கள் உதவியை ரஷ்யா பெற்றுள்ளது. வடகொரிய ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை உக்ரைன் போரில் ரஷ்யா ஈடுபடுத்தி உள்ளது. இன்னும் 1 லட்சம் வடகொரியா வீரர்கள் போரில் இணைய தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தகவல் வெளியிட்டார். இதனால் இப்போர் 3ம் உலகப் போராக மாறும் வாய்ப்பை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு உலகப் போர் ஏற்படாமல் தடுக்க வேண்டிய ஐநா அமைப்போ, எந்த சக்தியும் இல்லாமல் அமெரிக்காவிடம் கையேந்தி நிற்கிறது.
The post அமெரிக்க ஏவுகணை வீசி உக்ரைன் தாக்குதல்; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால் ரஷ்யா பதிலடி: அழிவின் பாதையை நோக்கி சுழலும் உலகம்; அணு ஆயுத யுத்தமாகும் அபாயம் appeared first on Dinakaran.