மதுராந்தகத்தில் நடந்து வரும் ஏரி பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் நடந்து வரும் ஏரி தூர்வாரும் பணி, மதகு அமைக்கும் பணி உள்ளிட்டவை விரைந்து முடிக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பெரிய ஏரிக்கு உத்திரமேரூர், வந்தவாசி மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பகுதியில் இருந்து சிறு சிறு ஓடைகள் மூலம் நீர்வரத்து வருகிறது.

அதன் காரணமாக பெரும்பாலும் இந்த ஏரி நீர் நிரம்பியே காணப்படும். இதன் மூலமாக இந்த ஏரியின் கீழ்புறம் அமைந்துள்ள அருங்குணம், காவதூர், தேவத்தூர், முள்ளி, வளர்பிறை, முன்னூத்திகுப்பம், முருக்கஞ்சேரி, கத்திரிசேரி, தோட்டநாவல், இருசாமநல்லூர், கே.கே.புதூர், குன்னத்தூர், வீராணகுன்னம்ம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 4000 ஏக்கர் நிலம் இந்த ஏரியின் ஐந்து மதகுகள் வழியாக நேரடி பாசனம் பெறுகிறது.

இது மட்டும் இன்றி, இந்த ஏரியின் இரண்டு உயர்மட்ட கால்வாய்கள் வழியாக 30 சிறு சிறு ஏரிகளுக்கும் நீர் சென்று அந்த ஏரிகள் மூலம் சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த நிலங்களில் இப்பகுதிக்கே உரித்தான நெல், கரும்பு, வேர்க்கடலை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி எள், உளுந்து, காராமணி, பச்சை பயறு போன்ற சிறுதானியங்களும் பயிர் செய்யப்படுகின்றன.

அது மட்டுமின்றி இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்படும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றில் நீர் ஆதாரம் எப்போதும் நிறைந்து காணப்படும். இந்த அளவுக்கு நன்மை பயக்கும் இந்த ஏரி கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை என கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து, தமிழக அரசு இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் தொடங்கின.

இந்த பணிகளானது இந்த ஆண்டு (2024ம்) ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவு பெற வேண்டும் என அரசுக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பணிகள் முடிவடையாத காரணத்தினால் மேலும் அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு செய்து இந்த ஆண்டு (2024) டிசம்பருக்குள் பணிகள் முடிவடைய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள்ளும் முடியாத சூழ்நிலையே அங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 7000 ஏக்கர் விலை நிலங்களின் உரிமையாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்படைந்து வரும் வேளையில் இந்த பாதிப்பு மூன்றாம் ஆண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதுகுறித்து மதுராந்தகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்; ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தூர்வாரப்பட வேண்டிய சுமார் 250 ஏக்கரில் தற்போது 200 ஏக்கர் வரை தூர்வாரப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஏரி நீர் படிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருக்க 9 அடி உயரத்திற்கு மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மோச்சேரி, பில்லாஞ்சிகுப்பம், அனுமந்தகுப்பம், பசும்பூர், புதுப்பட்டு, வேடந்தாங்கல், மலைப்பாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 18 கிலோமீட்டர் அளவிற்கு இந்த தடுப்பு ஏற்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், இந்த ஏரியில் உள்ள ஐந்து மதகுகளில் இரண்டாவது மதகு மட்டும் முழுமையாக அகற்றப்பட்டு கட்டமைக்கும் பணி முடிந்துவிட்டது.

மற்ற நான்கு மதகுகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிவில் ஒர்க்குகள் அனைத்தும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடைந்து விடும். ஷெட்டர் அமைக்கும் பணி போன்றவைகளை மேற்கொள்ள அடுத்த ஒரு வருடத்திற்கு காலக்கெடு இருந்தாலும் வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே நிறைவு பெற்றுவிடும்’என தெரிவித்தார்.

மேலும், இனி வருவது மழைக்காலம் அப்போதும் ஏரிக்கு வரும் நீரை சேகரிக்க முடியாத அளவிற்கு போனால் அடுத்த ஆண்டிற்கும் விவசாயம் பாதிக்குமே என கேட்டபோது, ‘ஷெட்டர் அமைக்கும் பணிகள் தாமதம் ஆனாலும் ஏரியில் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதனால், விவசாயிகள் பயன் பெறுவர் என தெரிவித்தார்.

இந்த ஏரியில் 50 சதவீதம் தண்ணீர் இருந்தால்தான் ஒரு போகம் விவசாயம் செய்ய முடியும். இந்த சூழ்நிலையில் 20 முதல் 25 சதவீதம் தண்ணீரை தேக்கி வைத்தால் விவசாயம் செய்ய இயலாது என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. எனவே, அரசும் அதிகாரிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

* 2 ஆண்டுகளாக பாதிப்பு
இப்பகுதிகளில் பிரதானமாக நெல் பயிர் விவசாயம் நடைபெறுகிறது. அந்த விவசாயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத நிலையில் நெல் வாங்கி விற்கும் வியாபாரிகள் இப்பகுதியை விட்டு பிற பகுதிகளுக்கு நீண்ட தூரம் பயணித்து நெல் மூட்டைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு கூடுதலாக நேரமும் பொருளாதாரமும் செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

* கூலி தொழிலாளர்கள்…
விவசாயக் கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு தற்போது வேலை கிடைப்பதில்லை. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு சென்று கஷ்டப்பட்டு வேலை செய்து திரும்ப வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து, பணியின்போது கடுமையான உழைப்பு போன்றவற்றால் தாங்கள் மிகவும் சோர்வடையதாக தெரிவிக்கின்றனர்.

* விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எங்களுக்கு விவசாயம் தவிர்த்து வேறு எந்த தொழிலும் தெரியாது. எங்கள் குடும்பமே இந்த விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. அடுத்த ஆண்டும் இதேநிலை தொடரும் எனும்போது மிகவும் வேதனையாக உள்ளது. அவ்வாறு இல்லாமல் அரசும் அதிகாரிகளும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

The post மதுராந்தகத்தில் நடந்து வரும் ஏரி பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: