×
Saravana Stores

தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது சரியா?

நன்றி குங்குமம் தோழி

தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது என்பது முடியின் வேர்கால்களை கண்டிஷனிங் செய்யும் சிகிச்சையாகும். உச்சந்தலை மற்றும் முடியில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது அது ரத்தஓட்டத்தினை அதிகரித்து, முடிக்கு புத்துயிர் அளித்து, அழகான தோற்றத்தை அளிக்க உதவும். இந்தப் பழமையான நடைமுறை தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில், முடி ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சமூகவலைத்தளங்களில் பலர் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெ யினை விற்பனை செய்து வருவதால், மீண்டும் மக்கள் பழங்கால அழகு முறையினை கடைபிடிக்க துவங்கியுள்ளனர்.

தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது அழகியல் மட்டுமல்ல, தலைமுடியை வலுப்படுத்தவும், தலைமுடி வறண்டு போகாமலும், பொடுகை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
கையில் கிடைக்கும் எண்ணெயை தலையில் தடவுவதால் அதன் பலனை அடைய முடியாது. மாறாக நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய், அதனை உபயோகிக்கும் முறை, உங்களின் தலைமுடியின் தன்மை அனைத்தும் மாறுபடும்.

முடிக்கு எண்ணெய் தடவுவதால் நன்மைகள்

முடிக்கு எண்ணெய் தடவுவதால் வறண்டு இருக்கும் முடி இழைகளுக்கு நீரோட்டம் கொடுத்தது போலாகும். தலைமுடிக்கு ஹேர் டிரையர், ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமாக பின்பற்ற வேண்டும். எண்ணெய் முடிகளுக்கு ஈரப்பதத்தை மீட்டுக் கொடுக்கும். தலைமுடி மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்க உதவும். எண்ணெய் தடவுவதன் மூலம் வறண்ட கூந்தலுக்கு குட்பை சொல்லுங்கள்.

ஆரோக்கியமான உச்சந்தலை ஆரோக்கிய முடிக்கு அடித்தளம். உச்சந்தலையில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்கால்கள் வளரவும், பொடுகு மற்றும் அரிப்பைக் குறைக்க உதவும். எண்ணெய் முடியை வலுப்படுத்தவும், முடியின் நுனியில் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கும்.

தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும் முறை

உங்களின் தலைமுடிக்கு ஏற்ப எண்ணெய் வைக்கும் முறையினை பின்பற்ற வேண்டும். வறண்ட முடி என்றால் வாரத்தில் இரண்டு முறை வைக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள முடி என்றால் வாரம் ஒரு முறை வைக்கலாம். சாதாரண தலைமுடிக்கும் வாரத்தில் ஒரு முறை வைக்கலாம். உங்களின் தலைமுடிக்கு ஏற்ப எண்ணெயை தேர்வு செய்த பிறகு மிதமாக சூடு செய்து, உச்சந்தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

உங்களின் தலைமுடியினை சின்னச் சின்ன பகுதியாக பிரித்து தலையில் அனைத்து பகுதியிலும் எண்ணெய் படும்படி விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை தூண்டும். மசாஜ் செய்த பிறகு முடியின் அனைத்துப் பகுதியிலும் எண்ணெயை தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். தேவைப்பட்டால் மிதமான சூட்டில் உள்ள டவலை தலையில் கட்டிக் கொள்ளலாம். ஷாம்பு போட்டு குளிக்கும் போது கண்டிஷ்னர் போடுவதை மறந்துவிடாதீர்கள்.

The post தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது சரியா? appeared first on Dinakaran.

Tags : kumkum dodhi ,Dinakaran ,
× RELATED மழைக்கால சருமப் பராமரிப்பு!