‘தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்’ என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றது அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை : ‘தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்’ என்ற அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது. இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணிநியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

ஏதேனும் திட்டங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டால் தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடியும் வரை பணியில் அமர்த்தலாம். ஏதேனும் ஒரு துறையில் கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் பற்றாக்குறை உள்ள வேறு துறையில் பணியமர்த்தலாம். இந்த புதிய உத்தரவு 20.1. 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது,” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம். ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்ற மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் எடுக்கக் கூடாது, முறையாக அறிவிப்பு வெளியிட்டு நிரந்தர பணியாளர்களாக எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ‘தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்’ என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றது அண்ணா பல்கலைக்கழகம்! appeared first on Dinakaran.

Related Stories: