×
Saravana Stores

தீங்குகளை நீக்கும் திரஸ்கரிணி தேவி

திரஸ்கரிணி என்றால், திரை என்று பொருள். இந்த உலகெங்கும் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்க மற நிறைந்திருக்கிறார் இறைவன். ஆனால், நம்முடைய மானிட கண்களுக்கு இறைவன் தெரிவது இல்லை. காடு, மலை, செடி, கொடி, போன்ற தோற்றங்கள்தான் தெரிகிறதே ஒழிய, இறைவன் தெரிவது இல்லை. இதற்கு காரணம், எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் இறைவனை ஒரு திரை மறைத்திருக்கிறது. அந்த திரைதான் இப்படி காடு, மலை, செடி, கொடி, போன்ற தோற்றங்களை நமக்குக் காட்டுகிறது. இறைவனை மறைக்கிறது. இப்படி இறைவனை மறைத்து, உலக நாடகத்தை நடத்துபவள்தான் இந்த “திரஸ்கரிணி தேவி’’.

காடு, செடி, கொடி போன்ற மாயத் தோற்றங்கள் தெரிவதால் தானே பிரபஞ்சம் இயங்குகிறது. அனைவரின் கண்களுக்கும் இறைவன் மட்டும் தெரிந்தால், அனைவரும் ஞானியாகி யோகத்தில் அமர்ந்து விடுவார்கள் இல்லையா? பிறகு எப்படி உலகம் இயங்கும். இப்படி மாயை என்ற திரையை போட்டு உலகத்தை நடத்துவதால், இந்த அம்பிகைக்கு “திரஸ்கரிணி’’ என்று பெயர். அதனாலேயே, இந்த அம்பிகையின் மூலமந்திரம் இவளை “மகா மாயை’’ என்று அழைக்கிறது. எப்படி முடிச்சை போட்ட வனாலேயே அந்த முடிச்சை அவிழ்க்க முடியுமோ, அது போல உலகம் முழுவதும் பரவி இருக்கும் இறைவனை மறைத்து, திரஸ்கரிணி தேவி போட்ட மாயை என்ற திரையையும் அவளாலேயே விலக்க முடியும். ஆகவே, காணும் இடமெல்லாம் இறைவனை காணும் அத்வைத ஞானம் சித்திக்க வேண்டும் என்று ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும், திரஸ்கரிணி தேவியை வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது, இவளது அருளால் பிரம்ம ஞானம் சித்திக்கும் என்பது கருத்து.

ஆன்மிக ரகசியங்களை காக்கும் திரஸ் கரிணி தேவி. அம்பிகையை எப்போதும் ரகசியமாக பூஜிக்க வேண்டும். இதனாலேயே, அம்பிகைக்கு ஏகாந்த பூஜிதா (தனிமையில் பூஜிக்க படுபவள்) என்று ஒரு நாமம் லலிதா திரிஷதியில் வருகிறது.அம்பிகையை வழிபடும் முறைகளில் மிகவும் உத்தமமானது, ஸ்ரீவித்யா உபாசனையாகும். இந்த உபசானா வழிகளும், மந்திரங்களும் அதிரகசியமாக பாதுகாக்கபட வேண்டியவை. அம்பிகையே இந்த ரகசியங்களை பாதுகாக்கிறாள் என்று லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்கிறது (குல சங்கேத பாலினி). இப்படி ஆன்மிக ரகசியங்களை காக்க உதவுபவள்தான் திரஸ்கரிணி தேவி. இறை வழிபாடும், உணர்வும், ரகசியமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

இதற்கு ஒரு காரணமும் உண்டு. உலகில் உள்ளவர்கள் சிலர், ஞான மார்க்கத்தில் அதிக நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கலாம். அல்லது இறைவனை வழிபடுபவர்களை நிந்திப்பவர்களாகவும், வெறுப்பவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் அறியும் படி இறைவனை வழிபடுவதோ, அல்லது ஞான மார்க்கத்தை பின் பற்றுவதோ பல இடைஞ்சல்களை ஒரு சாதகனுக்கு தரலாம். ஆகவே, வெளியில் தெரியாமல், மனதாலேயே ஆத்மார்த்தமாக, இறைவனை வணங்க வேண்டியதுதான் சரியான வழிபாடு. இதையே “அந்தர்முக சமாராத்யா’’ என்ற லலிதாசஹஸ்ர நாமத்தில் ஒரு நாமம் நமக்கு சொல்கிறது.

ஆகவே, மகான்கள் பலர் தங்கள் தெய்வீக அனுபவத்தை வெளியில் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். இதைத்தான் “கண்டவர் விண்டிலர்’’ என்று சொல்வார் திருமூலர். அதாவது, இறைவனை உணர்ந்தவர், அதை வெளியில் சொல்ல மாட்டார். சொல்லவும் விரும்பமாட்டார் என்று பொருள். மொத்தத்தில் மகான்கள், பிறர் மத்தியில் இருக்கும் போது அவர்களிடம் உள்ள தெய்வீக சக்தியை, மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைப் போலவே தங்களையும் காட்டிக் கொள்வார்கள். இப்படி தங்களுடைய, தெய்வீக உணர்வை, ஞானத்தை உலகத்தில் இருப்பவர்களிடம் மறைக்கவும், தக்க மனிதர்களிடம் அதை வெளிப்படுத்தவும், ஞானிகள் திரஸ்கரிணி தேவியை பூஜிப்பார்கள்.

குண்டலினி யோகத்தில் திரஸ்கரிணி தேவி

இந்த தேவி, நீலம் கலந்த கறுப்பு வஸ்திரத்தை அணிந்து கொண்டு, கறுப்புக் குதிரை பூட்டப்பட்ட, கறுப்பு வண்ணத்தில் இருக்கும் தேரில் ஏறி வருவாள். இந்த தேருக்கு “தமோலிப்தம்’’ என்று பெயர். தனது திருக்கரங்களில் வாளையும் அந்தகாஸ்திரம் என்ற இருளை ஏற்படுத்தக் கூடிய அஸ்திரத்தையும் ஏந்தி இருப்பாள். இருளைப் பரப்பி, பக்தர்களின் எதிரிகளை நிலைகுலையச் செய்பவள் இந்த தேவி.

ஆறு ஆதார சக்கரங்களில் புருவத்தின் மத்தியில் இருக்கும் சக்ரம் “ஆக்ஞா சக்ரம்’’ என்று யோக சாஸ்திரங்கள் சொல்கிறது. இது மனத்தின் தத்துவத்தைக் குறிக்கும் சக்ரம். மனிதனின் மனதில் உலகாய மாயை என்ற திரை இருக்கும் வரை இறைவனை உணர முடியாது இல்லையா? ஆகவே இந்த ஆக்ஞா சக்ரத்தில், ஞானம் திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கிறதாக சொல்கிறார்கள். இந்த ஆக்ஞா சக்ரத்தின் அதிதேவதையாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹி தேவியின் அங்க தேவதைதான் திரஸ்கரிணி தேவி. அதாவது, வாராஹி தேவியின் ஆணையை ஏற்று, அவளுக்குத் தேவையான உதவிகளை செய்யும் தேவதைதான் இந்த திரஸ்கரிணி தேவி.

வாராஹி தேவியின் ஆணைக்கு இணங்க பக்குவப்பட்ட சாதகனுக்கு மாயை என்னும் திரையை நீக்கி அருள்கிறாள் திரஸ் கரிணி தேவி. அதனால், சாதகன் ஞானம் அடைகிறான். வெளிப்பட்ட ஞானத்தை இன்னமும் அகழ்ந்து எடுக்கிறாள் வாராஹி தேவி. இதனால், சாதகன் அனைத்தையும் அறிந்த சர்வக்ஞய நிலையை அடைகிறான்.இதனால், வாராஹி தேவிக்கு, “ஆக்ஞா சக்ரேஷ்வரி” என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. ஆக்ஞா சக்ரத்தில் வாராஹி தேவியோடு சேர்த்து திரஸ்கரிணி தேவியையும் யோகிகள் பூஜிக்கிறார்கள். இந்த திரஸ்கரிணி தேவியினுடைய திருத்தலம் வேதாரண்யமாகும்.

திரஸ்கரிணி தேவியின் வரலாறு நமக்குக் கூறும் ரகசியம்

லலிதா திரிபுர சுந்தரி தேவியானவள், பண்டாசுரன் என்ற அரக்கனை நோக்கி போர் தொடுத்து செல்லும் போது, அந்த போரில் அம்பிகைக்கு பெரும் உதவி செய்தவள் இந்த திரஸ்கரிணி தேவி. பண்டாசுரனுடனான போரின்போது, அசுரனின் ஏழு முக்கிய படைத் தளபதிகள் அம்பிகையை எதிர்த்து போர் புரிய வருகிறார்கள். இவர்கள் பெரும் அரக்கியான கிகசாவின் மகன்கள். பலாகன், சூசிமுகன், பாலாமுகன், விகர்ணன், விகடானனன், கராலாக்ஷன் மற்றும் கரதகன் என்ற இந்த ஏழு மாவீரர்களும் போரில் இறங்குகினார்கள். இவர்கள் முன்னொரு காலத்தில் சூரியனை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து ஒரு வரம் பெற்று இருந்தார்கள். அதன் படி, யுத்தத்தின் போது, அவர்களது கண்களில் சூரியன் பிரகாசிப்பார். அவர்களது கண்களில் பிரகாசிக்கும் சூரியன், எதிரிகளை அசைவற்றவர்களாக ஆக்கி, எரித்துவிடுவார்.

முன்னொரு காலத்தில் பெற்ற இந்த வரத்தை, அம்பிகையுடனான போரில் அந்த அரக்கர்கள் பயன்படுத்தினார்கள். அவர்களது கண்களில் சூரியன் பிரகாசிக்க ஆரம்பித்தான். அம்பிகையின் படை அதனால், அசைவற்று நிலை குலைய ஆரம்பித்தது.உடனே லலிதா திரிபுர சுந்தரிதேவி, தனது போர் தளபதியான ஸ்ரீவாராஹியின் பிரத்யங்க தேவதையான திரஸ்கரிணி
யிடம் இந்தத் தடையை நீக்கும்படி கட்டளையிட்டாள். தேவி திரஸ்கரிணி இருண்ட நிற கவசத்தை அணிந்து, இருண்ட குதிரைகள் பூட்டப்பட்ட “தமோலிப்தா’’ (இருளால் வர்ணம் பூசப்பட்ட) தேரில் இறங்கி அவர்களுடன் கடுமையாக போரில் ஈடுபட்டார்.

திரஸ்கரிணி தேவி “அந்தகாஸ்திரம்’’ (குருட்டுத்தன்மையை உண்டாக்கும் அஸ்திரம்) என்று அழைக்கப்படும் ஒரு கறுப்பு நாகம் போன்ற ஒரு அம்பை எறிந்து, கொடிய அரக்கர்களின் பார்வையை குருடாக்கினாள். பிறகு விளையாட்டாகவே அவர்களைக் கொன்றாள். இந்த வரலாறு நமக்கு பல விதமான தத்துவங்களை சொல்கிறது. கிகசாவின் புதல்வர்களான இந்த ஏழு பேர், ஜீவாத்மாக்களின் மனதை விடாது இருக்கும் ஏழு விதமான மலங்களை அல்லது மனதின் ஏழு நிலைகளை குறிக்கிறார்கள்.

விழிப்பு நிலை (ஜாக்ரத்), கனவுநிலை (ஸ்வப்னம்), அனைத்தையும் உணரக்கூடிய விழிப்பு நிலை (வியக்த ஜாக்ரத்), விழிப்பு இருந்தும் எதையும் உணரமுடியாத நிலை (அவியக்த ஜாக்ரத்), விழிப்பு நிலையில் மனிதன் காணும் கனவு (ஜாக்ரத் ஸ்வப்னம்), உணரக்கூடிய கனவு (வியக்த ஸ்வப்னம்) உணர முடியாத கனவு (அவியக்த ஸ்வப்னம்), கனவு நிலையில் இருக்கும் விழிப்பு (ஸ்வப்ன ஜாக்ரம்), இவை அனைத்தும் மனதின் ஏழு நிலைகள்.

இந்த எழு நிலைகளிலும் நம்மால் இறைவனை உணர முடிவது இல்லை. இறைவனும் நாமும் ஒன்றே என்ற எண்ணமோ, அல்லது நமக்குள்ளே இறைவன் இருக்கிறார் என்ற உணர்வோ, மேலே நாம் கண்ட மனதின் ஏழு நிலைகளில் நமக்குத் தோன்றுவதே இல்லை.

இந்த ஏழு நிலைகளில் இருந்தும் மனிதன் விடுபடும் போதுதான் இறைவனை மனதால் உணர முடியும். எப்படி இந்த ஏழு மன நிலைகளும், ஒரு மனிதன் ஆழ்ந்த நித்திரைக்குள் செல்லும் போது, காணாமல் போய் விடுகிறதோ, அப்படியே இந்த மகா நித்திரையின் வடிவான திரஸ்கரிணி தேவி மனதின் ஏழு நிலைகளை அடக்கி இறைவனை உணரச்செய்கிறாள். இந்த ஏழு அரக்கர்களின் தாய், கிகசா என்று அழைக்கப்படுகிறார். அதாவது கடினப்பட்ட மனம் என்று பொருள். இந்த கடினப்பட்ட மனதில் ஏழு விதமான தீய எண்ணங்கள் தோன்றுகிறது. இந்த தீய எண்ணங்களே தீய குணங்கள் கொண்ட மனிதர்களை உண்டாக்குகிறது.

பலாகன். அதாவது மேகம் என்று பொருள். மேகம் சூரிய ஒளியை மறைக்கும். அறியாமை என்னும் மேகம் ஞான சூரியனை மறைக்கும். எனவே இது சரியான புரிதல் இல்லாமல், அதாவது அறியாமையால், அம்பிகையை வழிபடுவார்கள் மீது வெறுப்பைக் காட்டுபவர்களை குறிக்கிறது. அதாவது ஸ்ரீவித்யாவின் நடைமுறைகள் மீது சந்தேகத்தின் நிழலை வீசுபவர்களைக் குறிக்கிறது.

அடுத்து சுசீமுகன். சுசீ என்றால் ஊசி என்றும், முகம் என்றால் வாய் மற்றும் அதிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் என்றும் பொருள். இது அம்பிகையின் அடியார்களை வாய்ச் சொல்லால்
அவமதிப்பவர்களைக் குறிக்கிறது. அடுத்து பாலாமுகன். பாலா என்றால் மனம் என்று பொருள். மனதில் இருக்கும் விஞ்ஞான நுண்ணறிவைக் குறிக்கிறது. மேலும், முன்னம் கூறியது போல முக என்றால் வாயிலிருந்து வெளிப்படும் சொல்லைக் குறிக்கிறது.

அதாவது, இறைவனை உணரத்தான் முடியும் என்பதை மறந்து, இறைவனை மறுத்து அறிவியல் ரீதியாக குதர்க்க கேள்விகளை கேட்பவரை இது குறிக்கிறது. அடுத்து விகர்ணன். கர்ண: என்றால் காது என்று பொருள். `வி’ என்ற உரிச்சொல் முறையில்லாத தன்மையைக் குறிக்கிறது. எனவே இந்த அரக்கன், குருவின் உபதேசத்தை ஒழுங்காக புரிந்து கொள்ளாமல் தப்பான அர்த்தங்களை செய்யும் மாணவனை குறிக்கிறது. அடுத்து விகடானனன். “விகட’’ என்றால் நகைச்சுவை என்று பொருள். “ஆனனா’’ என்றால் முகம் அதாவது “வாய்’’ என்று பொருள். இது இறைவனை வணங்குபவர்களைக் கேலி செய்பவர்களை குறிக்கிறது.

அடுத்து கராளாக்ஷன். “கராள’’ என்றால் பயமுறுத்தக்கூடிய என்று பொருள். மற்றும் “அக்ஷ’’ என்றால் கண்கள் என்று பொருள். இறைவனை வழிபட பயப்படுபவர்களை இது குறிக்கிறது. அடுத்து கராடகன்: கராதன் என்றால், நாத்திகர் என்று பொருள். ஆனால், தன்னைத் தானே இறைவனை நம்புபவர் போல காட்டிக் கொள்பவரை குறிக்கிறது.மேலே கண்ட ஏழு விதமான துஷ்டர்களிடம் இருந்து அம்பிகையின் அடியவர்களை இந்த தேவி காக்கிறாள் என்பது பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்ட இந்த தேவியின் வரலாற்றின் ரகசியமாகும்.

இந்த அம்பிகையை எப்படி வணங்குவது மற்றும் வணங்குவதால் என்ன நன்மை விளையும்?

அந்த காலங்களில், ராஜாக்கள் தங்களுடைய புதையல்கள் எதிரியின் கண்களுக்குத் தெரியாமல் இருக்க, இந்தத் தேவியின் மந்திரத்தை பயன்படுத்தி மந்திரக்கட்டு போட்டதாக அறிந்துகொள்ள முடிகிறது. “திரஸ்கரணம்’’ என்றாலே மறைத்து வைத்தல் என்றுதான் பொருள். ஆகவே, நமது பெரும் செல்வம், திறமை, வியாபார ரகசியம், வெற்றிக்காக நாம் கையாளும் சில கோட்பாடுகள், போன்றவற்றை, நமது எதிரிகளின் கண்களில் இருந்து மறைக்க இந்த தேவி உதவுகிறாள்.

திருவாரூர் தியாக ராஜ பெருமானின் ரகசியங்களையே ஒரு ரோஸ் நிற திரை வடிவில் இருந்து கொண்டு இந்த தேவிதான் மறைத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதும் இங்கே ஒப்பு நோக்க தகுந்தது. அதே சமயம், மறைக்கப்பட்ட இந்த திறமை, செல்வம் போன்றவற்றைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தவும், இந்தத் தேவி நமக்கு அருள் செய்கிறாள்.

இதனாலேயே இவளது மூல மந்திரம் இவளை மகாமாயா என்று அழைக்கிறது.அதே போல, தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. ஆனால், இந்த கலி காலத்தில் அந்த தூக்கம் சரியாக வராமல் பலர் அவதிப்படுகிறார்கள். அதற்காக மாத்திரைகளைச் சாப்பிடுகிறார்கள். ஆனாலும், அவர்களுக்குத் தூக்கம் வருவதில்லை. இப்படிப்பட்டவர்கள் இந்த தேவியை வணங்கினால், அவர்களுக்கு நல்ல தூக்கத்தை இந்த தேவி கொடுத்து அருள் செய்கிறாள். அதனாலேயே இவளது மூலமந்திரம் இவளை “மகா நித்ரா’’ என்று அழைக்கிறது.

“நீலம் துரங்க மதி ருஹ்ய விராஜ மாநா
நீலாம் சுகா பரண மால்ய விலோப நாட்யா
நித்ரா படேந புவநாநி திரோததாநா
கட்காயுதா பாகவதீ பரி பாது ஸா ந:’’

என்ற இந்த அம்பிகையின் தியான ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டாலே, இந்த அம்பிகை நமக்கு வேண்டியவை அனைத்தையும் தருவாள்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post தீங்குகளை நீக்கும் திரஸ்கரிணி தேவி appeared first on Dinakaran.

Tags : Thraskarini Devi ,
× RELATED கார்த்திகையில் கண் திறக்கும் நரசிம்மர்