மேட்டுப்பாளையத்தில் பாழடைந்த கட்டிடங்களால் விபத்து அபாயம்

 

மேட்டுப்பாளையம், நவ.22: மேட்டுப்பாளையம் நகராட்சி 4வது வார்டு கச்சேரி வீதியில் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாக கிளை சிறைச்சாலை, நீதிமன்றம், வனத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது இந்த கட்டிடங்கள் எவ்வித செயல்பாடும் இன்றி பாழடைந்த நிலையில் கட்டிடங்கள் சிதலமடைந்து உள்ளது. இந்த பாழடைந்த கட்டிடங்களில் விஷப்பூச்சிகளும், பாம்பு உள்ளிட்டவையும் குடியிருந்து வருகின்றன.

இதனால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பாழடைந்த கட்டிடங்களை ஒட்டி குடியிருக்கும் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் இச்சாலை வழியாகத்தான் மேட்டுப்பாளையம்,சத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறது.

இந்த கட்டிடங்கள் அரசு கட்டிடமா? அல்லது தனியார் கட்டிடமா? என்பது குறித்து கேட்டபோது அவர்களுக்கே தெரியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாழடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் பூங்காவோ அல்லது வேறு ஏதேனும் அரசுத்துறை கட்டிடமோ கட்ட வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேட்டுப்பாளையத்தில் பாழடைந்த கட்டிடங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: