வழக்கறிஞர் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்க மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா: பார்கவுன்சில் பரிந்துரை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்குமாறு தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒசூரில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கண்ணன் மீது அரிவாளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருவதாக கூறினார். தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது பார்கவுன்சில் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரினார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், நேற்று முன்தினம் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிவிட்டதா, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா, இந்த சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என்றனர். இதனையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும் மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி தமிழ்நாடு பார்கவுன்சில் பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வழக்கறிஞர் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்க மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா: பார்கவுன்சில் பரிந்துரை தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: