×
Saravana Stores

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: இலங்கை அதிபர் திசநாயக உறுதி

கொழும்பு: சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக நாடாளுமன்ற கூட்டத்தின் தொடக்க உரையாற்றினார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 14ம் தேதி நடந்தது. இதில், அதிபர் அநுரகுமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி(என்பிபி) மொத்தம் உள்ள 225 இடங்களில் 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கடந்த 1989ம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும்.

என்பிபி கட்சி வெற்றியை தொடர்ந்து பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்றார்.இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அதிபர் திசநாயக கொள்கை விளக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது: தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, கடந்த கால தவறுகள் நிவர்த்தி செய்யப்படும். சட்டத்தின் முன் அனைவரும் பொறுப்புக் கூறக்கூடியவர்களாகவும் சமமானவர்களாகவும் ஆக்குவது எங்கள் அரசின் நோக்கம்.

கடந்த கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும். முந்தைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் வென்றெடுப்பதே எங்களுடைய கடமையாகும். ஆட்சியில் இனம், மதம் அல்லது பாகுபாடு அடிப்படையிலான அரசியல் இருக்காது.

சர்வதேச நாணய நிதியத்துடன்(ஐஎம்எப்) ஒப்பந்தம் ஒன்றை நாளைக்குள் இறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம்.கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்கள் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் பேசினார். சபாநாயகர் தேர்வு: இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக என்பிபியை சேர்ந்த அசோக் ரன்வாலாவும், துணை சபாநாயகராக ரிஸ்வி சலிஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

The post சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: இலங்கை அதிபர் திசநாயக உறுதி appeared first on Dinakaran.

Tags : Lankan ,President ,Disanayake ,Colombo ,Anura Kumara Disanayake ,Sri Lankan parliamentary ,Anurakumar Dissanayake ,President Dissanayake ,
× RELATED இலங்கை தேர்தலில் அனுர திசநாயகேவுக்கு தமிழர்கள் ஆதரவு