×
Saravana Stores

சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும் அனைத்து போட்டிகளும் நடத்தும் இடமாக மாமல்லபுரம் இசிஆர் சாலை மாறியுள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: அனைத்து போட்டிகளும் நடத்தும் இடமாக மாமல்லபுரம் இசிஆர் சாலை மாறியுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள இன்டர்கான்டினென்டல் தனியார் ரிசார்ட்டையொட்டி உள்ள கடற்கரையில் நேற்று மாலை தொடங்கியது. வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் 42 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 24 அணிகள் என மொத்தம் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வந்து வீரர், வீராங்கனைகளை அறிமுகப்படுத்தி சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு வாலிபால் அசோசியேஷன் தலைவர் தெய்வசிகாமணி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் தேவாரம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு விளையாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது முதல்வர் பொறுப்பேற்ற பிறகு 2022ம் ஆண்டு சர்வதேச 44வது செஸ் போட்டி, சர்வதேச சர்பிங் போட்டி, சைக்கிளோத்தான் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்தி சாதனை படைத்துள்ளது.

இதனால், உலக நாடுகளின் பார்வை தமிழ்நாடு மீது திரும்பி உள்ளது. தற்போது, இளம் வீரர்களை தயார் செய்து வருகிறோம். சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும். அனைத்து, போட்டிகளும் நடத்தும் இடமாக மாமல்லபுரம் இசிஆர் சாலை மாறியுள்ளது. இவ்வாறு பேசினார்.

The post சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில் தமிழ்நாடு மாறும் அனைத்து போட்டிகளும் நடத்தும் இடமாக மாமல்லபுரம் இசிஆர் சாலை மாறியுள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ECR road ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,CHENNAI ,Mamallapuram ,Intercontinental ,Vadanemmeli… ,
× RELATED ராயபுரத்தில் மேம்பாலம்: துணை முதல்வரிடம் எம்எல்ஏ கோரிக்கை