திருச்செந்தூர் கோயில் யானை குறித்து மருத்துவர்கள் ஆய்வு கோயில் யானைக்கு வனத்துறை அனுமதி வேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் வனத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வனத்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் யானை, புலி உட்பட வன உயிரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வனத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி பெறாமல்தான் திருச்செந்தூர் கோயிலில் தெய்வானை யானையை வைத்திருந்தனர். அந்த யானை அசாம் மாநிலத்தில் இருந்து வந்தது என ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாகியிருந்தன. கோயில் யானைகளுக்கு வனத்துறையிடம் அனுமதி பெறுவது குறித்து அறநிலையத்துறையிடம் பேசி வருகிறோம். அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காதபோதுதான் யானைகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கோயில் யானைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடையதாகும். திருச்செந்தூர் கோயில் யானையை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு முகாமுக்கு அனுப்புவது அல்லது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அதற்கான அனுமதியை வழங்குவது குறித்து ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளோம். அரிட்டாபட்டி நிலம் வருவாய் துறையின் அறக்கட்டளை எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை உயிர் பன்முகத்தன்மை பகுதியாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். அந்த பகுதியில் 250 பறவைகள், வெள்ளை வல்லூரு, ராஜாளி பறவை போன்ற பல புதிய பறவை இனங்கள் அங்கு உள்ளன. அரிட்டாபட்டி பகுதி வனப்பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம். அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்க ஆலைக்கு அனுமதி வேண்டி ஒன்றிய அரசு தமிழக வனத்துறையை இன்னும் அணுகவில்லை. தமிழக அரசின் வனத்துறையிடம் ஒன்றிய அரசு அனுமதிக்கு கேட்கும்போது சுரங்க ஆலை திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post திருச்செந்தூர் கோயில் யானை குறித்து மருத்துவர்கள் ஆய்வு கோயில் யானைக்கு வனத்துறை அனுமதி வேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: