மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மதுரையில் அவசர தரையிறக்கம்: அமைச்சர் உட்பட 77 பயணிகள் தவிப்பு

மதுரை: மோசமான வானிலையால் அமைச்சர் எ.வ.வேலு உட்பட 77 பயணிகள் சென்ற தூத்துக்குடி விமானம் நேற்று மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையிலிருந்து தனியார் விமானம் தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உட்பட 77 பயணிகளுடன், சென்னையிலிருந்து நேற்று காலை 6.26 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம், தூத்துக்குடிக்கு 7.45 மணிக்கு வந்தது. தூத்துக்குடி விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை. சில நிமிடங்கள் வானிலேயே வட்டமடித்தது. வானிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறங்கியது.

மதுரை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் உட்பட 50 பேர் கார் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 27 பேர் மதுரையில் காத்திருந்து, வானிலை சரியானவுடன் அதே விமானத்தில் காலை 11.25 மணிக்கு தூத்துக்குடி சென்றனர். இதனால் தூத்துக்குடியில் 4.30 மணி நேரம் காத்திருந்த 55 பயணிகளுடன் விமானம் மீண்டும் சென்னைக்கு பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக திடீரென மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மதுரையில் அவசர தரையிறக்கம்: அமைச்சர் உட்பட 77 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: