திருச்சி: திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.4.75 கோடி மோசடி செய்த பாஜ நிர்வாகி, மனைவியுடன் நேற்று கைது செய்யப்பட்டார். திருச்சி ரங்கத்தை சேர்ந்தவர் கே.வி.ரெங்கசாமி. ெதாழிலதிபரான இவருக்கு அப்பகுதியில் 17 ஏக்கர் தோட்டம் உள்ளது. இவர், சென்னையில் வசித்து வருவதால் ரங்கத்தை சேர்ந்த கோவிந்தன்(57) என்பவரிடம் தோட்டத்தை பராமரிக்கும் பொறுப்பை விட்டிருந்தார். கோவிந்தன் பாஜ விவசாயி அணி மாநில துணை தலைவராவார். அவர் கடந்த சில ஆண்டுகளாக தோட்டத்தை பராமரித்து வந்தார். இந்நிலையில் கோவிந்தனுக்கு, ரங்கத்தை சேர்ந்த தேவராஜன்(50) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். அப்போது அவரிடம் கோவிந்தன் தனக்கு சொந்தமான தோட்டத்தை விற்பனை செய்ய உள்ளதாகவும், நல்ல ஆள் இருந்தால் அழைத்து வரும்படியும் கூறியுள்ளார்.
இதைகேட்ட தேவராஜன், தானே வாங்கிக்கொள்வதாக கூறியதால், கோவிந்தன் பேரம் பேசி ரெங்கசாமி பெயரில் இருந்த ஆவணங்களை அவரிடம் கொடுத்தார். அதன்படி தேவராஜன் பல்வேறு தவணைகளில் ரூ.4.75 கோடியை கோவிந்தனிடம் கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் கோவிந்தன் அவருக்கு பத்திரப்பதிவு செய்து தராமல் இழுத்துடித்து வந்தார். பின்னர் விசாரித்த போது, கோவிந்தன் போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜன் திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோவிந்தன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கீதா(50) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நில உரிமையாளர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, அவரது கையெழுத்தையும் கோவிந்தனே போலியாக போட்டு தேவராஜனுக்கு விற்க முயன்றுள்ளார்’ என தெரிவித்தனர்.
The post போலி ஆவணம் மூலம் 17 ஏக்கர் விற்பனை ரூ.4.75 கோடி மோசடி பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.