திரைப்படம் வெளியான முதல் நாளில் தியேட்டர் வளாகத்தில் யூடியூபர்களுக்கு தடை?: உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி

திருப்பூர்: ‘திரைப்படம் வெளியான முதல் நாளில் திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக அடுத்த வாரம் சென்னையில் முடிவு அறிவிக்கப்படும்’ என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கூறினார். திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிக பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் பற்றி திரையரங்குகளில் இருந்தவாறு யூடியூபர்ஸ் வெளியிடும் எதிர்மறையான கருத்துக்களால் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என திரைத்துறை சார்ந்த தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால், திரையரங்க வளாகத்திற்குள் யூடியூபர்ஸ் முதல் நாளிலேயே ரசிகர்களிடம் கருத்து கேட்டு, எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.‌

இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல் செய்யும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்களுக்கு உரிமை உண்டு என இயக்குநர் பாரதிராஜாவும் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சென்னையில் தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடக்கிறது. இதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதை தடுக்க முடியாது. இருப்பினும், அவதூறு மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடப்படும் பட்சத்தில் சட்டரீதியாக அதை எதிர்கொள்ள உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 4,800 திரையரங்குகள் இருந்த நிலையில் தற்போது 1,168 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. இதே நிலை நீடித்தால் திரைத்துறை மிகப்பெரும் அளவில் பாதிக்கும் என்பதால் அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post திரைப்படம் வெளியான முதல் நாளில் தியேட்டர் வளாகத்தில் யூடியூபர்களுக்கு தடை?: உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: