கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்: பழவேற்காடு அருகே பரபரப்பு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு அருகே உள்ள அவுரிவாக்கம் மேல்குப்பம் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள், கூட்டுத்தொழில் முறையில் 2 நாளுக்கு ஒரு முறை பழவேற்காடு ஏரியில் பாடு பிரித்து கூட்டாக மீன்பிடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பழவேற்காடு ஏரியில் தனக்கு தனி பாடு பிரித்து தர வேண்டும் என கிராம நிர்வாகிகளிடம் கேட்டதாகவும், அதற்கு கூட்டாக இருந்து தொழில் செய்வதுதான் நமது பாரம்பரியம் என நிர்வாகிகள் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு சம்மதம் தெரிவிக்காத அந்த நபர், கிராம நிர்வாகிகள் மீது திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மேலும், கிராம நிர்வாகிகள் மீதும், மீனவர்கள் மீதும் காவல்நிலையத்தில் தொடர்ந்து பொய்ப்புகார் அளித்துள்ளார். இதனைக்கண்டித்து, தனிநபரின் செயலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி மீனவர்கள் காவல்நிலையம் மற்றும் பொன்னேரி தாசில்தார் மதிவாணனிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மீனவர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது, பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார் கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு தரப்பினரின் வாதங்களை கேட்டு சமாதான பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதன் பேரில் முற்றுகையில் ஈடுபட்ட மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்: பழவேற்காடு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: