களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழா: பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு

களக்காடு: களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். களக்காடு ஐயப்பன் கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. மஹா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனைதொடர்ந்து சாஸ்தா ருத்ர ஏகாதசி மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. பூர்ணாகுதியை தொடர்ந்து கடம் எழுந்தருளல் நடந்தது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் பட்டர்கள் கோயிலில் வலம் வந்தனர். பின்னர் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் கோலாகலத்துடன் நடந்தது. அதன் பின் ஐயப்பன், ஆதி விநாயகர், ஹரிஹரசுப்பிரமணியர், எண்கோடி சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகங்களும், விஷேச அலங்கார தீபாராதனைகளும் இடம் பெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கற்பூர ஆழி பூஜையும், ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரணகோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற 27ம் தேதி குருபூஜை நடக்கிறது. அன்று காலை முதல் மாலை வரை திருவாசக முற்றோதுதல் நடைபெறுகிறது. அடுத்த மாதம் டிச.25, 26ம் ஆகிய தேதிகளில் மண்டல பூஜை விழாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை களந்தை ஐயப்பன் கோயில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

The post களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழா: பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: