அரசு சித்த மருத்துவ கல்லூரி 60ம் ஆண்டு நிறைவு; நெல்லையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தியாகராஜ நகர்: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி 60ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர். நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி கடந்த 1964ம் ஆண்டு நெல்லையில் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதல் அரசு சித்த மருத்துவ கல்லூரியாக தொடங்கப்பட்டு பல்வேறு அரசு சித்த மருத்துவ சேவைகளை செய்து வருகிறது. இங்கு இளங்கலை பாட பிரிவில் 100 பேரும், முதுகலை பாட பிரிவில் 60 பேரும் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகின்றனர். மேலும் நர்சிங் பயிற்சி போன்ற கல்வி வசதிகளும் உள்ளன.

இக்கல்லூரி வருகிற 30ம்தேதியுடன் 60ம் ஆண்டை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டு பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 60 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் மற்றும் மாணவ குழுவினர் சென்று சித்த மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ கல்வியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக காணொலி குறும்படம் ஒன்றை தயாரித்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

சித்த மருத்துவம் பயில்வதற்கு அடிப்படை கல்வி தகுதி, இந்த கல்வியை படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு போன்றவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி வருகின்றனர். 60ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சித்த மருத்துவ கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக பாளையங்கோட்டை தபால் அலுவலகம் வரை சென்று மீண்டும் கல்லூரி திரும்பினர். விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

பேரணியில் சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பயிற்சி டாக்டர்கள், முதுகலை மாணவர்கள், இளங்கலை மாணவர்கள், செவிலிய மாணவர்கள், மருந்து தயாரிப்பு பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

The post அரசு சித்த மருத்துவ கல்லூரி 60ம் ஆண்டு நிறைவு; நெல்லையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: