பூனை பிடிப்பதுபோல் நோட்டமிட்டு வீடுகளில் நகை, பணம் திருடிய பெண் உட்பட 4 பேர் கைது: சிக்க வைத்தது மூன்றாவது கண்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் பூனை பிடிப்பதுபோல் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடிய பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே உள்ள நந்திமங்கலம், ராஜபாளையம், ராமகுப்பம், வெங்கல் ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்படுவதாக திருவள்ளூர்மாவட்ட எஸ்பி. சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்ஐ நாகராஜ் மற்றும் குற்றப்பிரிவு எஸ்ஐக்கள் ராவ்பகதூர், செல்வராஜ் மற்றும் ஏட்டு ராஜன், மந்திரசேகர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திருடர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவந்தனர். அப்போது ஆந்திர மாநில எல்லை பகுதிகள்வரை சுமார் 70 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு பெண் உட்பட 3 பேர் திருட்டு நடந்த வீடுகளில் இருந்து வெளியே வருவது பதிவாகியிருந்தது. இதன்படி, நேற்றுமுன்தினம் சீத்தஞ்சேரி பஜார் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது கும்மிடிப்பூண்டி கோங்கல்மேடு கிராமம் எஸ்டி காலனியை சேர்ந்த கிருஷ்ணன் (26), காளஹஸ்திரி ராஜிவ் நகரை சேர்ந்த சத்யராஜ் (35), இவரது மனைவி பிரமிளா (30), கும்மிடிபூண்டி சித்திரையசை கண்டிகை டி.ஏ.நகரை சேர்ந்த அஜித் (21) என்பது தெரிந்தது.

விசாரணையின்போது இவர்கள் கூறியதாவது;
பூனைகளை பிடிப்பதுபோல் வந்து வீடுகளை நோட்டமிடுவோம். பின்னர் பகல் நேரத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளை பார்த்து பணம், நகை திருடுவோம். திருடிய பணத்தில் வசதியாக வாழலாம் என்று நினைத்து மாட்டிக்கொண்டோம். இவ்வாறு தெரிவித்தனர்.

இதையடுத்து பெண் உள்பட 4 பேரிடம் இருந்து 5 சவரன் நகை, 700 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவர்களை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பூனை பிடிப்பதுபோல் நோட்டமிட்டு வீடுகளில் நகை, பணம் திருடிய பெண் உட்பட 4 பேர் கைது: சிக்க வைத்தது மூன்றாவது கண் appeared first on Dinakaran.

Related Stories: