குன்றத்தூர்: சென்னை அருகே மாங்காடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர், அப்பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜ்குமார் (25). இவர் வேலப்பன்சாவடியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக ராஜ்குமார் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், கல்லூரிக்கு செல்லாமலும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கல்லூரிக்கு சென்ற ராஜ்குமாரின் தாய், அங்கு கல்லூரி டீனிடம் ராஜ்குமாரின் நிலை குறித்து தெரிவித்து, அவருக்கு கவுன்சிலிங் வழங்கும்படி கூறியுள்ளார். கல்லூரி டீனும் ராஜ்குமாரை கவுன்சிலிங்குக்கு வரும்படி அழைத்துள்ளார். இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் நேற்று வீட்டுக்கு வந்து, தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு மனஉளைச்சலுடன் தனது அறைக்கு சென்ற ராஜ்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு ராஜ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கல்லூரி மாணவர் ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மருத்துவ கல்லூரி மாணவரின் தற்கொலையில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.