கரூர்: அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதானியை கைது செய்ய வேண்டும் என்றும், பார்லிமென்ட் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி; அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய மின்சாரத்துறையுடன் 1500 மொகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்னிடம் நேரடியாகவோ அல்லது மின் துறை அதிகாரிகளுடனோ கேட்டு தெரிந்துகொண்ட பிறகே பதிவிட வேண்டும் என்று கூறினார்.
The post அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.