வேலூர் அடுத்த பாகாயத்தில் அரசு அதிகாரி வீட்டில் 60 சவரன் திருடிய மருமகன் கைது

வேலூர், நவ.21: வேலூர் அருகே அரசு அதிகாரி வீட்டில் 60 சவரன் நகை திருடிய அவரது மருமகனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது நண்பரை தேடி வருகின்றனர். வேலூர் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாலமன் (67). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவரது மனைவி மேரிஷெலின். இவர்களது மகன் அலெக்ஸ்தேவபிரசாத், மகள் ராதிகா. ராதிகாவுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷாம்ஜெபதுரைக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலமனின் மனைவி மேரிஷெலின் இறந்துவிட்டாராம். இதையடுத்து மேட்டுஇடையம்பட்டியில் சாலமன் அவரது மகள் ராதிகா, மருமகன் ஷாம்ஜெபதுரை ஆகியோர் வசித்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த 14ம்தேதி ராதிகாவும் அவரது கணவர் ஷாம்ஜெபதுரையும் திருவள்ளூரில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். சாலமன், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தனது மகனின் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சாலமனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள ஒரு அறையில் பீரோவையும் உடைத்து அதில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை சாலமன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 60 சரவன் தங்க நகைகளை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சாலமனின் மருமகன் ஷாம்ஜெபதுரை ஆட்டோவில் வந்து இறங்கி வீட்டுக்கு செல்வது பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் ஷாம்ஜெபதுரை 60 சவரன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூரில் இருந்த ஷாம்ஜெபதுரையை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருவளளூரில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்த ஷாம்ஜெபதுரையின் நண்பரான உசேன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மாமனார் வீட்டில் மருமகன் நகை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post வேலூர் அடுத்த பாகாயத்தில் அரசு அதிகாரி வீட்டில் 60 சவரன் திருடிய மருமகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: