உயர்கோபுர விளக்குகள் இருந்தும் இருளில் மூழ்கும் டதிபள்ளி ஜங்ஷன்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் டதிபள்ளி ஜங்ஷனில் உள்ள உயர்கோபுர விளக்கு அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள மரங்களின் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள பழைய தெருவிளக்குகள் மாற்றப்பட்டு புதிதாக எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுமார் 15 ஆயிரம் தெருவிளக்குகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பழைய தெருவிளக்குகள் மாற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில மாநகரத்தில் முக்கியமான இடமான வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், நாகராஜாகோயில் திடல், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஜங்ஷன், மணிமேடை ஜங்ஷன், வெட்டூர்ணிமடம் ஜங்ஷன், டதிபள்ளி ஜங்ஷன், கலெக்டர் அலுவலக ஜங்ஷன் உள்பட பல்வேறு இடங்களில் உயர்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் உயர்கோபுர விளக்குகள் போடப்பட்டுள்ள இடங்களில் வெளிச்சம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. தெருவிளக்குகள் சரியாக எரியவேண்டும் என மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் டதி பள்ளி ஜங்ஷன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறது. ஆனால் உயர்கோபுர விளக்கை சுற்றி உயர்வான மரங்கள் இருப்பதால், உயர்கோபுர விளக்கின் வெளிச்சம் கீழ் பகுதியில் விழாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இதனால் உயர்கோபுர விளக்கு அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி விளக்கின் ஒளி பரவலாக விழுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டதி பள்ளியை ஒட்டியுள்ள மின்கம்பத்திலும் எல்இடி பல்புகள் பொருத்துவதற்கும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உயர்கோபுர விளக்குகள் இருந்தும் இருளில் மூழ்கும் டதிபள்ளி ஜங்ஷன்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: