ஒரு துளி தாய்ப்பால் தங்கத்தை விட விலை மதிப்பானது!

நன்றி குங்குமம் தோழி

‘‘பிறந்த குழந்தைக்கு மிகவும் அவசியமானது தாய்ப்பால். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் அம்மாவிற்கு குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்காமல் போகும். அந்த நிலையில் அவர்கள் ரத்த வங்கியை போல் தாய்ப்பால் வங்கியில் இருந்து பாலைப் பெற்று தங்களின் குழந்தைக்கு கொடுக்கலாம்.

பச்சிளம் குழந்தைக்கு குறிப்பாக குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஃபார்முலா பாலிற்கு பதிலாக தாய்ப்பால் கொடுப்பது என்பது மிகவும் அவசியமானது. இதற்காக பல அம்மாக்கள் மத்தியில் தங்கள் குழந்தைக்கு கொடுப்பது மட்டுமில்லாமல் அதனை மற்ற குழந்தைகளுக்கும் தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்கிறார் பச்சிளம் குழந்தைகளின் நிபுணரான டாக்டர் நித்யா பொன்முடி.

‘‘ரத்த தானம் செய்வது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இப்போது தாய்ப்பால் தானம் செய்வது அவசியமாக மருத்துவத்துறையில் கருதப்படுகிறது. காரணம், பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி, இதனை மருத்துவமனைகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தாய்ப்பாலினை சேகரித்து அதனை தேவைப்படும் குழந்தைகளுக்கு அளித்து வருகிறது. குழந்தை பேறுக்கான சிகிச்சை முறையிலோ அல்லது சாதாரணமாக கருத்தரித்தாலும், சில குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கிறார்கள். அப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். ஆனால் சில அம்மாக்களுக்கு அந்த சமயத்தில் போதிய தாய்ப்பால் சுரப்பதில்லை.

அதே சமயம் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அவசியம். குழந்தைகளின் வளர்ச்சிக்காக ஃபார்முலா பால் பவுடர்கள் உள்ளன. பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். அதில் உள்ள சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தியும் அளிக்க உதவும். இதற்கு ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து மட்டுமே சிந்திக்காமல், மற்ற குழந்தையின் உயிரை காக்கவும் தாய்ப்பாலை தானம் செய்ய முன்வரவேண்டும் என்பது குறித்துதான் நாங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆறு மாதம் தாய்ப்பால்தான் உணவு. ஆறு மாதத்திற்குப் பிறகு அவர்கள் மற்ற உணவுகளை உட்கொண்டாலும், ஒரு வருடம் வரை தாய்ப்பாலும் அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிலர் இரண்டு வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்வதால் அவர்கள் ஆறு மாதம் வரைதான் குழந்தைக்கு தாய்ப்பால் ெகாடுக்கிறார்கள். ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்கு திட உணவினை கொடுப்பதால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் ஒரு சிலருக்கு சீக்கிரமே தாய்ப்பால் சுரப்பது குறைய வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் அவர்கள் தாய்ப்பாலினை தானம் செய்வதன் மூலம் தங்களின் குழந்தைக்கு மட்டுமில்லாமல் தாய்ப்பால் தேவை உள்ள மற்ற குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவியாக இருக்கும்’’ என்றவர் அதனை பதப்படுத்தப்படும் மற்றும் சேகரிக்கும் முறை குறித்து விவரித்தார்.

‘‘தாய்ப்பால் தானம் செய்ய விரும்பும் தாய்மார்களுக்கு அதற்கென சென்டர்கள் உள்ளன. அங்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுப்பார்கள். மருத்துவமனைகளிலும் இது குறித்து தொடர்பு கொள்ளலாம். காரணம், சில மருத்துவமனைகள் ரத்த வங்கி போல் தாய்ப்பால் வங்கியுடன் இணைந்து செயல்படுவார்கள். லாக்டேஷன் நிபுணர்களும் இது குறித்து உதவுவார்கள். நீங்கள் தாய்ப்பால் தானம் கொடுக்க இருந்தால், அவர்களே அதற்கான கிட்டினை கொடுப்பார்கள். அதில் தாய்ப்பாலினை சேமித்து கொடுக்கலாம். அதை அவர்களே எடுத்து செல்வார்கள். இல்லை நீங்கள் தனிப்பட்ட கிட் வைத்திருந்தால் அதில் சேகரிக்கலாம். ஆனால் சேகரித்தவுடன் அதனை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்திட வேண்டும். வெளியே வைக்கக்கூடாது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் சிலர் அவர்களின் குழந்தைக்காக தாய்ப்பாலினை சேகரித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு சேமிக்கும் தாய்ப்பாலினை வெளியே வைத்தால் நான்கு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்தால் 24 மணி நேரம் வரை பாதுகாக்க முடியும். அதற்கு மேல் நேரம் கடந்துவிட்டால் அதனை கீழே கொட்டிவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் தாய்ப்பாலினை அப்படியே கொடுக்காமல் டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கி குழந்தைக்கு தரவேண்டும். நேரடியாக மற்ற பால்கள் போல் சுட வைக்கக்கூடாது. ஆனால் இதுவே வங்கியில் வைக்கப்படும் போது அதில் உள்ள பாக்டீரியா எல்லாம் நீக்கப்பட்டு முறையாக பாஸ்சுரைஸ் செய்யப்பட்டு, மைனஸ் டிகிரியில் வைக்கப்படுவதால், மூன்று மாதம் வரை அதனை பாதுகாக்க முடியும்.

தாய்ப்பாலினை தானம் செய்வதால் அம்மாக்களுக்கு உடல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் அதிகப்படியாக தானம் செய்யும் போது சுரப்பு தன்மையும் அதிகரிக்கும். ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும். தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் போது அம்மாக்களின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்கு திரும்பும். உடல் எடை குறையும். ஒரு துளி தாய்ப்பால் தங்கத்தை விட விலை மதிப்பானது. அது ஒரு ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க வழிவகுக்கும்’’ என்றார் டாக்டர் நித்யா.

டாக்டர்: ஷன்மதி

 

The post ஒரு துளி தாய்ப்பால் தங்கத்தை விட விலை மதிப்பானது! appeared first on Dinakaran.

Related Stories: