ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் எனது மகளுக்கு ஆண்டு கட்டணம் ரூ4.27 லட்சம் வசூலிக்கப்படுவதாக அதன் ரசீதை வெளியிட்டு தந்தை ஆதங்க பதிவை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தண்ணீரைப் போல வீணடிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவது மிகவும் சவாலான விசயமாக மாறிவிட்டது. நடுத்தர வர்க்கத்தினரால் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு தனியார் பள்ளிகளின் கட்டணம் அதிகமாக உள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது முதல் படிப்பை படித்து முடித்து விட்டு வெளியே வரும் வரை பணம்… பணம்… என்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் பள்ளிக் கட்டணங்கள் பெற்றோருக்கு பெரும் தலைவலியாக மாறி வருகின்றன. சமீபத்தில், அதே பிரச்னையில் போராடும் ஒரு தந்தை தனது மகளின் ஒன்றாம் வகுப்பு கட்டண ரசீதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரிஷப் ஜெயின் என்பவர் வெளியிட்ட பதிவில், ‘ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் எனது 5 வயது மகளை சேர்த்தேன். எனக்கு அவர்கள் அளித்த கட்டண விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓராண்டுக்கான ஆண்டு முழுவதும் கட்டணம் ரூ.4.27 லட்சம் என்று தெரிவித்தனர். இதுதான் இந்தியாவில் தரமான கல்வியின் விலையா? என்ற கேள்வி எழுகிறது. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பாதித்தாலும் உங்களால் இதுபோன்ற கல்வியை பெற முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஒன்றாம் வகுப்ப மாணவிக்கு பதிவு கட்டணம் – ரூ 2,000, சேர்க்கை கட்டணம் – ரூ 40,000, பாதுகாப்பு பணம் – ரூ 5,000, பள்ளி ஆண்டு கட்டணம் – ரூ 2,52,000, பேருந்து கட்டணம் – ரூ 1,08,000, புத்தகங்கள் மற்றும் சீருடை கட்டணம் – ரூ.20,000 என்று மொத்தமாக ஓராண்டு ஆண்டுக்கு ரூ.4,27,000 என்று வசூலிக்கின்றனர். எனது மகள் அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பில் சேரவுள்ளார்.
அதற்காக தான் இந்தப் பள்ளியில் கட்டணம் செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வைரலான பதிவை பார்த்த ஒரு பயனர், ‘தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண கொள்ளை நடக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவர், ‘தரமான கல்வி வேண்டுமானால் செலவு செய்து தான் ஆக வேண்டும்’ என்றார். மேலும் ஒருவர், ‘தரமான கல்வியை அரசால் தரமுடியாதா? ஏழை மக்கள் தரமான கல்வியை பெறமுடியாதா? அரசு என்பது யாருக்கானது’ என்று பலவாறாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
The post தனியார் பள்ளிகளின் வசூல் வேட்டை; 1ம் வகுப்பு மகளுக்கு ஆண்டு கட்டணம் ரூ4.27 லட்சம்: ரசீதை வெளியிட்டு தந்தை ஆதங்கம் appeared first on Dinakaran.