மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த விமான நிலையத்திலிருந்து அதிகமான விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்றுவர ஏதுவாக கடந்த 2009ஆம் ஆண்டு 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த 600 ஏக்கர் நிலம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு என்ற கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டது. இந்த கிராமத்தில் வாழும் 200க்கும் மேற்பட்டோர் வீடுகளையும், தங்களது விவசாய நிலங்களையும் இழக்க கூடிய நிலை ஏற்பட்டது. இதனடிப்படையில் 2009 -2011 ஆம் ஆண்டு விரிவாக அறிக்கை தாக்கல் செய்து அவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை 2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. நிலம் கையகப்படுத்தும் பணி சற்று தாமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை சின்ன உடைப்பு கிராமத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்துவதற்காக வருவாய் துறையினர், காவல்துறை உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அப்பகுதி மக்கள் கடும் போராட்டங்களை நடத்தியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனை எதிர்த்து கிராம மக்கள் சார்பாக சுமார் 250 நபர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தற்போது அவசர வழக்காக நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், நிலம் கையகப்படுத்தப்பட்டது ஆனால் எங்களுக்கு மாற்று இடங்கள் ஏதும் வழங்காமல் மிக குறைவான இழப்பீடு தொகையே வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்களை இங்கிருந்து வெளியேற்று வதற்கு முன் மாநகராட்சி பகுதிகளில் மாற்று இடம் வழங்க பரீசீலனை செய்ய வேண்டும். அதுவரை தங்களை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் பேரில் நீதிபதி மஞ்சுளா விசாரணை செய்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இடைக்காலமாக இங்குள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு உரிய சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் ஆக்கிரமிப்பு செய்வதற்கான விதி எண்.4 உள்ளது. அதனை முறையாக பயன்படுத்தி அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். அதன் பிறகு உரிய சட்டவிதிகளை பின்பற்றி நீங்கள் அக்கிரமிப்பாளர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதுவரை இவர்களை சின்ன உடைப்பு கிராமத்திலிருந்து வெளியேற்ற கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து தற்போது வழக்கு விசாரணையை டிசம்பர் மதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
The post மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற ஐகோர்ட் கிளை இடைக்கால தடை..!! appeared first on Dinakaran.