புழல்: சென்னையில் இருந்து மெத்தபெட்டமைன் போதை பொருட்களை கடத்திய போலீஸ் எஸ்ஐ கணவர், காங்கிரஸ் நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். சென்னை பாடி மேம்பாலம் அருகே இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை மேற்கு காவல் இணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார், பாடி மேம்பாலம் அருகே மாறுவேடத்தில் கண்காணித்தபோது சந்தேகப்படும்படியாக பைக்கில்வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பைக்கில், பெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் வைத்திருந்தனர். அவர்களை கைது செய்து புழல் காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
இதில் ஒருவர் குமரவேல் என்று தெரிந்தது. இவர்தான் போதை பொருட்கள் கடத்தலில் முக்கிய நபராகவும் செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய நபராகவும் இருந்துள்ளார். மேலும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வண்ணாரப்பேட்டை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விசாலாட்சியின் கணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணை நடத்தி இதுசம்பந்தமாக திருவேற்காடு ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சுபாஷ், புழல் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி வட்டத் தலைவராக பார்த்திபன் மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த அமீர் பாஷா, காவாங்கரை பகுதியை சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
The post சென்னையில் மெத்தபெட்டமைன் கடத்தல்: எஸ்ஐ கணவர், காங். நிர்வாகி உள்பட 5 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.