ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முயற்சிக்கும் மோடி; மணிப்பூர் கலவரத்தை ஏன் நிறுத்தவில்லை?.. ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

தண்டையார்பேட்டை: ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முயற்சிக்கும் மோடி மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை ஏன் நிறுத்தவில்லை? என தண்டையார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி யுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருடடகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் லோகநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய அரசை கண்டித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

இதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: கடந்த ஒரு வருடத்தில் 40 விழுக்காடு விலைவாசி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு காய்கறி விலை 42 விழுக்காடு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு காரணம் வாகனங்களின் சரக்கு கட்டண உயர்வுதான். சரக்கு கட்டண உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 18 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் 2.5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது வரி விதித்ததன் மூலம் 26 லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலே அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த நான் முயற்சி செய்கிறேன் என கூறுகிறார். ஆனால், இந்தியாவில் மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நடந்துகொண்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள், தேவாலங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அண்மையில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்கு செல்லவில்லை. அங்கு நடைபெறும் கலவரத்திற்கு காரணம், அம்மாநில முதலமைச்சரும், ஒன்றிய அரசும்தான். எனவே மணிப்பூர் முதலமைச்சர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யவேண்டும். விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை, சுங்கக்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மாமன்ற உறுப்பினர் விமலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முயற்சிக்கும் மோடி; மணிப்பூர் கலவரத்தை ஏன் நிறுத்தவில்லை?.. ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: