சென்னை: நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று காவல்துறை தகவல் அளித்துள்ளனர். தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை, தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள அடுத்தடுத்த 6 வழக்குகளில் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.முன்னதாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதியாக இருக்கும் சுவாமிநாதன் மனைவி காமாட்சி ஸ்வாமிநாதன் நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக பொது வெளியில் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “நடிகை கஸ்தூரிக்கு எதிராக பதிவான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது. ஆனால் அவருக்கு ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ளது; அவர் ஒரு தனி மனுஷியாய் அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்பதை அறிந்துகொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கும். நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான்; (Special Mother) எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். அதனால் அவரின் ஜாமின் வழக்கை கருணையோடு அணுக வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சக்ஷம் என்ற பெயரில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் தலைவராக காமாட்சி ஸ்வாமிநாதன் உள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. இதனிடையே சர்ச்சைப் பேச்சு வழக்கில் கைதான நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. சென்னை மாநகர காவல்துறை தரப்பில், கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கஸ்தூரிக்கு ஆட்டிசம் பாதித்த மகன் இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக நீதிபதி மனைவி வைத்த கோரிக்கை : ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என போலீஸ் தகவல்!! appeared first on Dinakaran.