புஞ்சை புளியம்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி மக்கள் சாலை மறியல்

 

சத்தியமங்கலம், நவ.20: புஞ்சை புளியம்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி. நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் வி.ஆர்.டி. மில் பஸ் ஸ்டாப் வரை இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இதுவரையிலும் பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதிகாரிகள் போக்கால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று புஞ்சை புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் எஸ்.ஆர்.டி. நகர் பஸ் ஸ்டாப் அருகே நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இது குறித்து தகவல் அறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் புஞ்சை புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post புஞ்சை புளியம்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: