×
Saravana Stores

வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்: வேகத்தடை, பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பொருத்த கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதியில் வேகத்தடை, பிரதிப்பலிப்பு ஸ்டிக்கர்கள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் ஊராட்சியில், 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் ஒன்றிய ஆரம்பப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம், நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஊத்துக்காடு கூட்டு சாலையில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் கடக்க முயலும்போது நாள்தோறும் விபத்துக்குள்ளாகும் சூழல் இப்பகுதியில் அரங்கேறி வருகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்டது கட்டவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சி ஊத்துக்காடு கூட்டு சாலையில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது இங்குள்ள மக்கள் நாள்தோறும் இந்த சாலையை கடக்கும்போது, இருசக்கர வாகனங்களில் விபத்துக்குள்ளாகும் சுழல் நாள்தோறும் நிலவுகின்றன.

மேலும், சாலை கடக்கும் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் முன்னெச்சரிக்கை பலகை பொருத்தப்படவில்லை. மேலும், சாலையை கடக்கும் பாதை வெள்ளை நிற கோடு போடப்பட்டிருக்கும் ஆனால் இப்பகுதியில் அப்படி போன்ற எந்த வெள்ளை நிற கோடுகளும் இல்லை. இவை மட்டுமின்றி இரவு நேரங்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் இல்லை. இதனால், இந்த சாலையில் அதிவேகமாக வரும் பைக், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலையை கடக்க முயலும் முதியவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் நாள்தோறும் நிலவுகின்றன. மேலும், ஒருசில நேரங்களில் விபத்துக்குள்ளாகி கை, கால்கள் முறிவு ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் இப்பகுதியில் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்றநிலை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நெடுஞ்சாலை துறை இதுவரை இங்கு முன்னெச்சரிக்கை பலகை அல்லது சாலையை கடக்கும் இடம் என குறிப்பிடும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், நாள்தோறும் விபத்துக்கள் தான் அதிகரித்து வருவது தவிர விபத்தை குறைப்பதற்கான எந்தவித முயற்சியும் நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளவில்லை. இதுபோன்றநிலையில் இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு இங்கு வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையை கடக்கும் பகுதி என்பதை குறிப்பிடும் வகையில் எச்சரிக்கை பலகைகளும், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் பொருத்தப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்: வேகத்தடை, பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பொருத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Walajahabad Union Kattawak ,Walajahabad ,union ,Kanchipuram District ,Wallajabad Union ,Kattavakkam Panchayat ,Kattavakkam ,Dinakaran ,
× RELATED ரேஷன் கார்டு குறைதீர் முகாம்