மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை திண்டுக்கல் சாலையில் சமயநல்லூர் பகுதியில் நாள்தோரும் வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதிகளில் வாகன விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனை தடுக்க உரிய உத்தரவு பிறபிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மதுரை நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் மரியா க்ளேட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சென்னையில் ஒரு அலுவல் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் நேரில் ஆஜராக முடியவில்லை என அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டும் நேரில் ஆஜராகாத மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தது. மேலும் அவர் நாளை மறுநாள் ஆஜராகி தன்மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சமயநல்லூர் டிஎஸ்பி தரப்பில் 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளில் 542 விபத்துகள் ஏற்பட்டு 137 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததே விபத்துகளுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் உரிய விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
The post மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை கடந்த 6 ஆண்டுகளில் 542 விபத்துகள்; 137 பேர் மரணம் appeared first on Dinakaran.