குன்னூர்: குன்னூரில் ஸ்ட்ராபெரி பழம் சீசன் தொடங்கிய நிலையில் ரூ.350 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் தேயிலை, மலைக்காய்கறிக்கு அடுத்தபடியாக பிச்சீஸ், பிளம்ஸ், ஸ்ட்ராபெரி போன்ற பழவகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கே.எம்.கே தெரு, கம்பிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ட்ராபெரி பழவகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
இவை குளிர் மற்றும் பனிக்காலத்தில் செழிப்பாக வளரும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்கு விளைவிக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராபெரி செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. மாவட்டத்தில் ஸ்ட்ராபெரி பழசீசன் தொடங்கி உள்ளதால், அங்கு விவசாயிகள் தற்போது பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் கூறுகையில்,
‘‘ஸ்ட்ராபெரி பயிரிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பழங்களை அறுவடை செய்யலாம். குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்து வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழங்கள் கடந்த ஆண்டு ரூ.250 வரை விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுவதோடு, வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ட்ராபெரி பயிர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்’’ என்றனர்.
The post ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழத்துக்கு ரூ.350 வரை விலை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.