மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு நகரில் பரபரப்பான மருத்துவமனை சாலையில் நேற்று மாலை 6 மணியளவில் காட்டெருமை நுழைந்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஓட்டம் பிடித்தனர். பிரபல சுற்றுலாத்தலமான மூணாறில் காட்டு யானை, புலி, காட்டு எருமை போன்ற வன விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரியும் காட்டெருமைகளால் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தென்மலை எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியை காட்டெருமை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணி அளவில் மூணாறில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பரபரப்பான பகுதியான டாட்டா ஹை ரேஞ்ச் மருத்துவமனை சாலை வழியாக நகருக்குள் புகுந்த காட்டெருமையை கண்டு அப்பகுதியில் இருந்த மக்கள் மட்டும் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
இந்த நேரத்தில் சாலை நின்று கொண்டிருந்தவர்கள் காட்டெருமையை கண்டு அருகில் இருந்த கடைக்குள் ஓடி தப்பினர்.மக்களின் கூச்சலை கேட்டு மிரண்டு போன காட்டெருமை அப்பகுதியில் இருந்த கடைக்குள் செல்ல முயன்றது. உடனடியாக கடையில் இருந்தவர்கள் இரும்பு கதவை மூடியதால் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அப்பகுதியில் ஒன்று கூடிய மக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து டாட்டா ஹை ரேஞ்ச் மருத்துவமனை சாலை வழியாக சென்ற காட்டெருமை தேயிலைத் தோட்ட பகுதி வழியாக வனப்பகுதிக்கு சென்றது.
காட்டெருமை வருவதை கண்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் நல்ல தண்ணி எஸ்டேட் பகுதியில் காட்டெருமை சுற்றி திரிவதை சிலர் கண்டுள்ளனர். மூணாறு நகரில் காட்டு எருமை, காட்டு யானை உட்பட உள்ள வனவிலங்குகளின் நடமாட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத வனத்துறைக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
The post மூணாறு நகருக்குள் புகுந்த காட்டெருமை: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.