அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தேனி-பெரியகுளம் சாலையில் மேம்பாலம் வருமா?: பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

தேனி: தேனியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தேனியில் அமைக்கப்படுவதாக இருந்த பாலம் கட்டுமானப்பணியும், நகர திட்டச்சாலை பணியும் நடைமுறைக்கு வருமா என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கடந்த 1997ம் ஆண்டு உதயமானது. மாவட்ட தலைநகராக தேனி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேனிக்கு புதியதாக வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல மாவட்ட தலைநகர் என்பதால் தேனியில்மாவட்ட அளவிலான அரசுத் துறை அலுவலங்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேனிக்கு இடமாறுதல் சம்பந்தமாக குடியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுதவிர கடந்த 27 ஆண்டுகளில் தேனியானது வர்த்தகத்தில் பெருநகரங்களுக்கு இணையாக வளர்ந்துள்ளது. மேலும், கல்வி நிலையங்களிலும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக வர்த்தகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தேனி நகரில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 95 ஆயிரத்து 468 பேர் உள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் இந்த மக்கள் தொகை குறைந்த பட்சம் 20 சதவீதமாவது அதிகரித்திருக்கும் என கணக்கிட்டால் தற்போது தேனியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர்.
வர்த்தகம், கல்வி, மருத்துவம், அரசுத் துறை அலுவலகம் என அனைத்து துறையிலும் வளர்ந்துள்ள தேனி நகருக்கு வாகனங்களில் வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

தேனியில் முக்கிய சாலைகளாக தேனி நகர் நேரு சிலையில் இருந்து பெரியகுளம் சாலை, கம்பம் சாலை, மதுரை சாலை ஆகிய மூன்று சாலைகள் மட்டுமே உள்ளது. இந்த மூன்று சாலைகளில் எப்போதும் போக்குவரத்து மிகுந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து அவசர காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமம் அடையும் நிலை உள்ளது. தேனி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநில நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேனி கொட்டக்குடி பாலம் அருகில் இருந்து துவங்கி பெரியகுளம் சாலையில் பழைய தாலுகா அலுவலம் வரையிலும், இடையில் நேரு சிலை அருகில் இருந்து பாலம் பிரிந்து பழைய பஸ் நிலையம் வரை பறக்கும் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இத்திட்டம் கடந்த கால ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனிலோ, போக்குவரத்து நெரிசல் குறித்த அக்கறையோ இல்லாததால் அலட்சியமாக இருந்து விட்டனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து, இப்பாலம் கட்டுமானப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

திட்ட அறிக்கை தயார்;
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தேனி கொட்டக்குடி பாலத்திற்கு முன்பு சுப்பன்தெரு பிரிவில் தொடங்கி நேரு சிலை வழியாக பெரியகுளம் சாலையில் பழைய தாலுகா அலுவலகம் மற்றும் மதுரை சாலையில் பங்களா மேடு வரை சுமார் 1.6 கிமீ தொலைவிற்கு பாலம் அமைக்க தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக ரூ.10.8 லட்சம் ஒதுக்கீடு பெற்று இதற்கு முன்பணியாக மண்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாலங்களுக்கான தூண்கள் அமைப்பது, பாலம் அமைக்கும்போது கூடுதலாக தேவைப்படும் இடம், இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்வது போன்ற தகவல்கள் அடங்கிய அறிக்கையை தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’என்றனர்.

நெடுஞ்சாலைத் துறை போக நகரின் மத்தியில் முக்கிய சாலை வழியாக வாகனங்கள் செல்வதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் மூலமாக நகரில் 9 இடங்களில் திட்டச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் ஆறு சாலைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. மீதமுள்ள தேனி நகர் சுந்தரம் தியேட்டர் பகுதியில் இருந்து கம்பம் சாலையை இணைக்கும் திட்டச்சாலை, சுப்பன் தெருவில் கம்பம் சாலை கொட்டக்குடி பாலத்தில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கினை அடையும் திட்டச்சாலை, புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்கான சாலையில் ஐடிஐ சாலை என மூன்று திட்டச்சாலைகளை இணைப்பதில் தனியார் நில உரிமையாளர்கள் நிலத்தை நகராட்சிக்கு ஒப்படைப்பதில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விரைவில் திட்ட சாலைகள் திறக்கப்படும்;
தேனிஅல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தேனி நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 9 திட்டச்சாலை உருவாக்கப்பட்டதில் ஆறு திட்டச்சாலைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. சுந்தரம் தியேட்டர் அருகே செல்லும் திட்டச்சாலை கம்பம் சாலையை இணைய ஆர்யவைஸ்யா அன்னசத்திரம் மற்றும் முஸ்லீம் தொழுகை பள்ளி வாசல் இடங்கள் இடையே வருகின்றன. இதேபோல சுப்பன்தெருவில் அரண்மனைப்புதூர் இணைப்பு சாலையை அடைய சாலையின் கிழக்கு புறம் தனியார் செங்கள் சூளை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது தேனி-மதுரை சாலையில் புதிய பஸ்நிலைய பிரிவில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் தேனி புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஐடிஐ வழியாக மதுரை சாலையை அடையும் திட்டச்சாலையில் தனியார் வீட்டு மனையிட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் நிரந்தரமாக போக்குவரத்தை செயல்படுத்த தனியார் வீட்டுமனை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் நிலையில், விரைவில் இம்மூன்று திட்டச்சாலைகளும் திறக்கப்படும் என்றனர். தேனி நகரானது போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறி வரும் நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் பாலம் கட்டுமானப்பணி, நகராட்சியின் திட்டச்சாலைகள் நடைமுறைக்கு வந்தாலொழிய நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு ஏற்படாது என்பதால் மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தேனி-பெரியகுளம் சாலையில் மேம்பாலம் வருமா?: பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: