தஞ்சாவூர், நவ 19: வீட்டு மனைப்பட்ட வழங்க கோரி நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு விவரம்:நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வருகிறோம். கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக மனை பட்டா நிலம் இல்லாத காரணத்தினால் அரசுக்கு சொந்தமான நீர் நிலை புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வருகிறோம். இங்கு குடியிருக்கும் குடும்பங்களும் அரசு வழங்கி வரும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு, வசதி வீட்டு வரி விதிப்பு எண், குடிநீர் வசதி முதலான வசதிகளையும் பெற்று வாழ்ந்து வருகிறோம். இங்கு குடி இருந்து வரும் அனைவரும் கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் நீர்நிலை புறம்போக்கு இடங்களை அதிகாரிகளால் நில அளவை செய்து ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது.
நாங்கள் பலமுறை வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. நாங்கள் குடியிருந்து வரும் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு இடத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி மேல்நிலை நீர் தூக்க தொட்டி கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம் முதலான அரசு சார் ந்த கட்டிடங்களும் உள்ளன. எனவே, மாவட்ட ஆட்சியர் தயவு கூர்ந்து நாங்கள் குடியிருந்து வரும் இடத்தினை மலை மாற்றம் செய்து தொகுப்பு வீடு கட்டிடத்துடன் கூடிய வீட்டுமனை பட்டா வழங்கி எங்களையும் எங்கள் குழந்தைகளையும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
The post வீட்டு மனைப்பட்ட வழங்க கோரி தென்பாதியினர் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.