கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

 

மதுக்கரை, நவ.19: கோவை போத்தனூர் அடுத்த மேட்டூர் அருகே சீனிவாசா நகர் உள்ளது. அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதிக்கு கோவை காந்திபுரத்தில் இருந்து மூன்று அரசு பேருந்துகள் சென்று வந்தன. அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பேருந்துகளின் வருகை நேரம் தெரிவிப்பதற்காக அங்கு பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்துகள், கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி திடீரென நிறுத்தப்பட்டது.

அப்போது நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை இன்று வரை துவக்கவில்லை. இங்கு பேருந்து வராததால், இங்குள்ளவர்கள் பேருந்துக்கு செல்ல வேண்டும் என்றால் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் மேட்டூர் பகுதிக்கோ அல்லது 2 கி.மீ தொலைவில் உள்ள எல்.ஐ.சி. காலனிக்கோ நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், இங்கு வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள் மட்டுமின்றி தொழிலாளர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியமால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வர வேண்டிய நிலை இருப்பதாக வேதனையோடு கூறுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சீனிவாசா நகர் பகுதிக்கு வழக்கம் போல் பேருந்துகள் வந்து செல்லும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

The post கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: